பயணத்தடை காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி செய்த மற்றும் விற்பனை செய்த 10பேர் இரு தினங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி நியூட்டன் அவுஸ்கோன் தெரிவித்தார்.
பயணத்தடை காரணமாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோதமான முறையிலான போதைப்பொருள் விநியோகங்களை தடுக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களம் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.
கிழக்கு மாகாண உதவி மதுவரி ஆணையார் ஏ.தர்மசீலன் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரி அத்தியட்சகர் எஸ்.ரஞ்சனின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி நியூட்டன் அவுஸ்கோனின் தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இது தொடர்பான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இதனடிப்படையில் நேற்றும் நேற்று முன்தினமும் வெல்லாவெளி,கிரான்,வாழைச்சேனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுகளில் இரண்டு இடங்களில் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டதுடன் அங்கிருந்து பெருமளவு கோடா மீட்கப்பட்டு அழிக்கப்பட்டதுடன் கசிப்பு உற்பத்தி பொருட்களும் மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களம் தெரிவித்தது.
இதேபோன்று கிரான்,வாழைச்சேனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் கசிப்பு மற்றும் சட்ட விரோதமதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த 08பேர் கைதுசெய்யப்பட்டதாகவும் கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி நியூட்டன் அவுஸ்கோன் தெரிவித்தார்.