வருடாந்தம் வைகாசி பூரணையை அடுத்து வரும் திங்கட்கிழமை நள்ளிரவு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடைபெறும் திருச்சடங்கு இம்முறை கொரோனா காரணமாக இம்மாதம் 31ந் திகதி பூசகர் உட்பட ஐவருடன் மட்டுப்படுத்தி நடாத்தவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆலய வண்ணக்கர் மூ. மன்மதராஜா தெரிவித்தார்.
களுவாஞ்சிக்குடி பொலிசார் மற்றும் சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைக்கமைவாக கொரோனா சுகாதார நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டு இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனவே இதற்கு பொதுமக்கள் பொலிசாருக்கோ அல்லது சுகாதாரப் பிரிவினருக்கோ ஆலய நிர்வாகத்திற்கோ எவ்வித சிரமமும் கொடுக்காமல் அம்மன் திருச்சடங்கு அமைதியாக உரிய கிரியைகளுடன் நடந்தேற பூரண ஒத்துழைப்பு அளித்து உதவ வேண்டும் என பக்தர்களை கோரியுள்ளார்.
வழக்கம்போல அம்மன் முகக்களை இம்முறை பெரிய எடுப்பில் எடுத்தவரப்படமாட்டாது. எனினும் மிகவும் இரகசியமான முறையில் முகக்களை நேரம் குறிப்பிடப்படாமல் ஆலயத்திற்கு எடுத்து வரப்படும். எனவே பக்தர்கள் வீதியில் நிறைகுடம் வைப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் கற்பூரச் சட்டி ஏந்தி வருதல் காவடி கரகம் என்பனவும் முற்றாககத் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆலய வளாகத்துள் மடை கொண்டு வருதல் அங்க பிரதட்சனை செய்தல் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றல் போன்ற விடயங்களும் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் அம்மனுக்கு உரிய பூஜைகள். கிரியைகள் குறிப்பாக பூரண கும்பம் நிறுத்துதல் என்பன எவ்வித குறையும் இல்லாமல் நடைபெறும் என்பதில் நம்பிக்கை வைத்து தங்களின் மேலான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.