நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாடானது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட் கொள்வனவில் ஈடுபடுவதற்காக இன்று (25) அதிகாலை 4 மணியுடன் தற்காலிகமாக தளர்த்தப்பட்ட நிலையில் மட்டக்களப்பு கல்லடி பாலம் ஊடாக அதிகளவு மக்கள் நகருக்கு நுழைய முற்பட்டபோது பொலிஸாரினால் அவை தடுத்து நிறுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக வெளியில் சென்றதன் காரணத்தினால் பொலீசாரினால் மட்டக்களப்பு மாவட்ட கல்லடி பாலமானது முடக்கப்பட்டது.
இதன்பொது அத்தியாவசியமற்ற தேவைகளுக்கு மட்டக்களப்பு மாநகருக்குள் வருகைதந்தோர் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பியனுப்பப்பட்டனர்.இதன் காரணமாக கல்லடி பாலத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து பழைய பாலம் ஊடாக தேவையற்ற வகையில் பிராயணம் செய்தோர் திரும்பியனுப்பப்பட்டனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாடானது பொதுமக்கள் முகங்கொடுக்கும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக, உணவு, மரக்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இன்றைய தினம் தளர்த்தப்பட்டது. ஆனாலும் பொதுமக்கள் அத்தியாவசியமற்ற தேவைகளுக்கு வெளியில் சென்றதனால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரமே வெளியில்செல்ல முடியும் என காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார். அத்துடன், அவ்வாறு வெளிச்செல்பவர்கள் நடைதூரத்தில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு மாத்திரமே செல்ல முடியும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் பொலிஸாரின் அறிவுறுத்தல்களை மீறி மட்டக்களப்பில் மக்கள் செயற்பட்டமையானது எதிர்காலத்தில் கொரனா அச்சுறுத்தல் பாரிய தாக்கத்தினை செலுத்தும் என சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர்.