மட்டக்களப்பில் அதிகமான தொற்றாளர்கள் - இரண்டு கிராம சேவையாளர் பிரிவினை முடக்க தீர்மானம் - டாக்டர் நா.மயூரன்


மட்டக்களப்பு பிராந்தியத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் ஆன்டிஜென் பரிசோதனைகளில் 18 பேர் கொரோணா தொற்றுள்ளவர்களாக  அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இரண்டு கிராமங்களை முடக்குவதற்கான பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதர பணிப்பாளார் நா மயூரன் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதார பிரிவு பகுதியைச் சேர்ந்த 15 பேரும் ஓட்டமாவடி செங்கலடி வெல்லாவெளி சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தலா ஒருவர் வீதம்  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மூன்றாவது அலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 375 கொரோணா தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 07 பேர் மரணமடைந்துள்ளனர்.

இரண்டு தினங்களுக்கு முன் ஆரையம்பதி சுகாதார பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் இடம்பெற்ற கொரொணா மரணத்தை தொடர்ந்து அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜென் பரிசோதனைகளில் 12பேர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து கிரான்குளம் பகுதியில் இரண்டு கிராம சேவகர் பிரிவுகளை தனிமைப் படுத்துவதற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.