மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் அரசார்பற்ற நிறுவனங்களுக்கிடையே நடைபெற்ற கிரிக்கேட் சுற்றுப்போட்டியில் நம்பிக்கை ஐக்கிய நிதியம் அமைப்பு வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.
ஈஸ்டர் தாக்குதல்,கொரனா அச்சுறுத்தல்,வெள்ள அனர்த்தம் என மாவட்டத்தில் ஏற்பாட்ட தொடர் அனர்த்த காலங்களில் தொடர்ச்சியான பணிகளை அரசார்பற்ற நிறுவனங்கள் முன்னெடுத்துவரும் நிலையில் அவர்கள் மத்தியில் உள்ள மன அழுத்தங்களை குறைப்பதற்கும் அரசார்பற்ற நிறுவனங்களுக்குடையில் நட்புறவினை ஏற்படுத்திக்கொள்ளும் வகையிலும் இந்த சுற்றுப்போட்டி நடாத்தப்பட்டது.
அம்கோர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை காலை ஆரம்பமான சுற்றுப்போட்டியில் 11 அரசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து ஒன்பது அணிகளாக சுற்றுப்போட்டியில் பங்குகொண்டது.
இந்த சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியானது இன்று மாலை நடைபெற்றது.இந்த இறுதிப்போட்டியில் ஆர்.டி.பி.ஓ.எனப்படும் கிராம அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பும் ஏ.டி.ரி.எனப்படும் நம்பிக்கை ஐக்கிய நிதியமும் மோதிக்கொண்டது.
ஏழு ஓவர்கள் கொண்ட இந்த சுற்றுப்போட்டியில் ஏழுபேர் கொண்ட அணிகளாக விளையாடிய நிலையில் முதலில் துடுப்பெடுத்தாயடி ஆர்.டி.பி.ஓ.எனப்படும் கிராம அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பு ஏழு ஓவர் நிறைவில் ஐந்து விக்கட்டுகளை இழந்து 72 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஏ.டி.ரி.எனப்படும் நம்பிக்கை ஐக்கிய நிதியம் 6.3ஓவர்கள் நிறைவில் இரண்டு விக்கட்டுகளை மட்டும் இழந்து 73ஓட்டங்களைப்பெற்று வெற்றி இலக்கினை தட்டிக்கொண்டு இந்த ஆண்டு சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.
இறுதி பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன்,சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி,முன்னாள் காணி ஆணையாளர் க.குருநாதன்,வை.எம்.சி.ஏ.செயலாள ஜே.ஜீவராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது தொடரின் ஆட்ட நாயகன் பரிசினை அம்கோர் நிறுவனத்தின் க.குகராஜாவும் சிறந்த பந்துவீச்சாளர் பரிசினை ஏ.டி.ரி.எனப்படும் நம்பிக்கை ஐக்கிய நிதியத்தின் வீரர் வோணுகோபனும் இறுதிப்போட்டி சிறப்பாட்டக்காரர் பரிசினை ஆர்.டி.பி.ஓ.எனப்படும் கிராம அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பு வீரர் எஸ்.கஜேகாந்தும் பெற்றுக்கொண்டனர்.
இந்த சுற்றுப்போட்டியில் மூன்றாவது இடத்தினை அம்கோர் நிறுவனமும் இரண்டாம் இடத்தினை ஆர்.டி.பி.ஓ.எனப்படும் கிராம அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பும்,முதலாம் இடத்தினை,ஏ.டி.ரி.எனப்படும் நம்பிக்கை ஐக்கிய நிதியமும் பெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.
இந்த சுற்றுப்போட்டியானது அம்கோர் அமைப்பின் உறுப்பினர்களின் ஊழியர் நலன்புரி சங்கத்தின் நிதியுதவியில் நடாத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.