கிழக்கின் முதுபெரும் தமிழ் இலக்கியவாதியான கலாபூசணம் ஆ.மு.சி.வேலழகன் எழுதிய ஐந்து நூல்களின் வெளியீட்டு நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் சங்க மண்டபத்தில் தமிழ் சங்க தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
கௌரவ அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன்,கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தியின் தலைமையுரையுடன் ஆரம்பமான நிகழ்வில் படைப்பாளி அறிமுக உரையினை தமிழ் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பா.குணசேகரன் நிகழ்த்தினார்.இந்த நிகழ்வில் கலாபூசணம் ஆ.மு.சி.வேலழகன் எழுதிய உருவுகண்டு எள்ளாமை வேண்டும்,அறிவற்றம் காக்கும் கருவி ஆகிய நாவல்களும்,தென்னாடுடையவனே எந்நாட்டிலும் என்னும் ஆய்வு நூலும் மறக்கமுடியுமா என்னும் நினைவுப்பகிர்வும் கீழைக்காற்று என்னும் கவதை நூலுமாக ஐந்து நூல்கள் வெளியிட்டுவைக்கப்பட்டன.
இதன்போது நூல் தொகுதிகள் பிரதம அதிதிக்கு நூலாசிரியரினால் வெளியிட்டு வைக்கப்பட்டதை தொடர்ந்து தேசபந்து மு.செல்வராசா முதல் பிரதியை பெற்று நூல் வெளியீட்டை ஆரம்பித்துவைத்தார்.
நூல் வெளியீட்டினை தொடர்ந்து நூல் நயவுரைகள் நடைபெற்றன. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் நாவல் தொடர்பில் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி ரூபி வலன்ரினா பிரான்சிஸ் நயவுரை நிகழ்த்தியதுடன் தென்னாடுடையவனே எந்நாட்டிலும் நூலின் நயவுரையினை கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சிரேஸ் விரிவுரையாளர் திருமதி கௌரி லக்சுமிகாந்தன் நிகழ்த்தினார்.
அறிவற்றம் காக்கும் கருவி நாவலுக்கான நயவுரையினை கிழக்கு பல்கலைக்கழகத்தின் விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் க.மோகனதாஸ் நிகழ்த்தியதுடன் கீழைக்காற்று என்னும் கவதை நூலுக்கான நயவுரையினை கிழக்கு பல்கலைக்கழக கிறிஸ்தவதுறைக்கான சிரேஸ்ட விரிவுரையாளர் அருட்பணி அ.அ.நவரெத்தினம் நிகழ்த்தியதுடன் மறக்கமுடியுமா என்னும் நினைவுப்பகிர்வு நூல் தொடர்பான நயவுரையினை இறைவரித்திணைக்களத்தின் சிரேஸ்ட அணையாளரும் முன்னாள் மட்டக்களப்பு தமிழ் சங்க தலைவருமான சட்டத்தரணி மு.கணேசராஜா நிகழ்த்தினார்.இதன்போது நூலாசிரியர் தமிழ் சங்கத்தினால் கௌரவிக்கப்பட்டதுடன் நூலாசிரியரின் ஏற்புரையும் நடைபெற்றது.