பன்சல வீதியில் நுகர்வுக்கு உதவாத மரக்கறிகளை விற்பனை செய்த நிலையம் சீல் வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா அச்சுறுத்தல் டெங்கு தாக்கம் ஆகியவற்றுடன் போராடிவரும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராகவும் போராடவேண்டிய நிலையினை காணமுடிகின்றது.

காரனா அச்சுறுத்தல் டெங்கு தாக்கம் ஆகியவற்றில் இருந்து பொதுமக்களை பாதுக்கவேண்டியதுடன் சுத்தமான உணவுகளையும் வர்த்தக நிலையங்களில் கொள்வனவு செய்யப்படுவதையும் உறுதிப்படுத்தவேண்டிய தேவை பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு உள்ளது.

மட்டக்களப்பு நகரில் பாவனைக்குதவாத மரக்கறிகளை விற்பனை செய்த மரக்கறி விற்பனை நிலையம் ஒன்று இன்று பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பன்சல வீதியில் உள்ள மரக்கறி விற்பனை நிலையம் ஒன்றே இவ்வாறு முற்றுகையிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மாகாண மேற்பார்வை பரிசோதகர் கே.ஜெயரஞ்சன் தலைமையில் கோட்டைமுனை பொதுச்சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தலைமையிலான பொதுச்சுகாதார பரிசோதகர் குழுவினர் இந்த முற்றுகையினை மேற்கொண்டனர்.

குறித்த மரக்கறி விற்பனை நிலையத்தில் உள்ள களஞ்சியசாலை மிக மோசமான நிலையில் இருந்ததுடன் அதனுள் அழுகிய நிலையில் பெருமளவான மரக்கறிகள் மீட்கப்பட்டது.

அத்துடன் வர்த்தக நிலையங்களில் முன்பாகவும் பாவனைக்குதவாத நிலையில் மரக்கறிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்து 220 கிலோவுக்கு அதிகமான பாவனைக்குதவாத மரக்கறிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறித்த வர்த்தக நிலையம் மூடப்பட்டுள்ளதுடன் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் மீதுன்ராஜ் தெரிவித்தார்.