அமைதியான நிலையினை சீர்குலைக்க முனையும் சக்திகள் -எச்சரிக்கும் பிள்ளையான்


நாட்டில் அமைதியான நிலைமை இருந்து சகல துறைகளும் சீராக இயங்கும்போதே தொழிற்சாலைகளை மாவட்டத்திற்கு கொண்டுவரமுடியும்,அதற்கான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் பி2பி போன்றவைகளை கொண்டு அவற்றினை குழப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திகாந்தன் தெரிவித்தார்.

முன்பிருந்த அரசாங்கம் வேலைத்திட்டத்தினை முன்மொழியுமே தவிர அது நடைபெறுகின்றதா என்று அவதானிக்காது,ஆனால் இந்த அரசாங்கம் சரியான நிர்வாக திட்டமிடலுடன் குழுக்களை அமைத்து திட்டங்களை கண்காணித்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டிற்கு வெளிச்சம் சுபிட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டம் ஊடாக மின்சாரமற்ற சமுர்த்தி பயனாளிகளிற்கு இலவச மின்சாரம் வழங்கல் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களிலும் திட்டம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் ஓந்தாச்சிமடம் கிராமத்தில் 10 சமூர்த்தி பயனாளிகளிற்கு மின்சாரம் வழங்கும் நிகழ்வு இன்று (20.03.2021) எமது பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் இடம்பெற்றது. 

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவரும் , களுவாஞ்சிகுடி பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக பிரதேச அபிவிருத்தி குழுவின் உபதலைவர் பரமசிவம் சந்திரகுமார் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலக அலுவலர்கள், கிராம மக்கள் போன்றோர் பங்குபற்றினர்.