திருப்பழுகாத்தில் வெள்ள நிலைமையினை தடுப்பதற்கான நடவடிக்கை


(ரஞ்சன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கிய போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருப்பழுகாமத்தில் வெள்ள நீரை வெளியேற்றுவது மற்றும் எதிர்காலத்தில் வெள்ளம் ஏற்படாது தடுப்பது தொடர்பாக ஆராயும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.  

மழை காரணமாக திருப்பழுகாமத்தின்  வீரன்சேனை, விபுலானந்தபுரம், வன்னிநகர்,மாவேற்குடா பழுகாமம்01,பழுகாமம் 02  ஆகிய கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுவருகின்றன.

விபுலானந்தபுரம்,வீரன்சேனை இரண்டு கிராம உத்தியோகத்தர்கள் பிரிவும் வெள்ள நீர் வடிந்து ஓடாமல் தாழ்ந்து காணப்படுகின்றமையினால் அப்பகுதி மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவந்தனர்.

குறித்த பகுதிக்கு சென்ற போரதீவுப்பற்றுபிரதேச சபைத்தவிசாளர் யோ.ரஜனி  நேரில் வந்து பார்வையிட்டதுடன் குறித்த பகுதியில் வெள்ள நீரை வெளியேற்றும் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்.

குறித்த பகுதியில் வெள்ள அனர்த்ததினை தடுப்பதற்கு முன்னெடுக்கவேண்டியn சயற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமையும் அழைத்துச்சென்று குறித்த பகுதியை பார்வையிட்டிருந்ததுடன் அது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடனும் கலந்துரையாடியிருந்தார்.

அதற்கு அமைய இன்று அப்பகுதிக்கு சென்ற போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் யோ.ரஜனி மட்டக்களப்பு மாவட்ட வீதி அதிகாரசபை பொறியலாளர்கள் மற்றும் வீதி ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் குறித்த பகுதியை பார்வையிட்டனர்.

அத்துடன் குறித்த பகுதியில் எதிர்காலத்தில் வெள்ளம் தேங்கி நிற்காமல் அமைக்கப்படவேண்டிய கல்வெட்டுகள் மற்றும் வடிகான்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன்போது அப்பகுதியில் மழை காலங்களில் வெள்ள நீர் வழிந்தோடும் வகையில்  இரண்டு கல்வெட்டுக்களைக்கொண்ட வடிகான்களும்  அமைப்பதன் மூலம் வெள்ள நீரானது இருபக்கங்களிலும் வழிந்தோடும் வகையில் செய்;வதனால் மழை காலங்களில் மக்களின் குடியிருப்புகள், பாடசாலைகள்,வீதிகள்,கடைகள் வெள்ளத்தினால் பாதிக்கப்படாது என சுட்டிக்காட்டப்பட்டது. 

அதனை தொடர்ந்து வெள்ள நிலைமைகள் உள்ள பகுதிகளில் கல்வெட்டுகளையும் வடிகான்களையும் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் தற்போது தேங்கியுள்ள வெள்ள நீரை அகற்றுவதற்கு தேவையான உதவிகளை வழங்குவதாகவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் உறுதியளிக்கப்பட்டது.

குறித்த பகுதியில் கல்வெட்டுகளை அமைப்பதற்கும் வெள்ள நீரை வெளியேற்றுவதற்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை உறுதியளித்துள்ளதாக போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி தெரிவித்தார்.