மாந்தீவினை வேறு செயற்பாடுகளுக்கு வழங்குதை தடுப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றம்


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாந்தீவில் அமைந்துள்ள  காணிகளை எந்த அரச, அரசசார்பற்ற அமைப்பினர்க்கும் ஒப்பந்தம் மூலம் வேறு செயற்பாடுகளுக்காக வழங்கப்படுவதை முன்கூட்டியே தடுப்பதற்கான தீர்மானமானது மட்டக்களப்பு மாநகர சபையினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு மாநகர சபையின் 43வது பொது அமர்வானது மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் (08.01.2021) வியாழக்கிழமை நடைபெற்றது. 

இவ் அமர்வில் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், ஆணையாளர் மா. தயாபரன், மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 

குறித்த அமர்வில் நிதிக்குழு உள்ளிட்ட குழுக்களின் சிபாரிசுகள், மாதாந்த வரவு செலவு அறிக்கை தொடர்பான விடயங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கான அனுமதிகளும் சபையில் வழங்கப்பட்டன.

இவ் அமர்வின் விN~ட அம்சமாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாந்தீவினை எந்த அரச, அரசசார்பற்ற அமைப்பினர்க்கும் ஒப்பந்தம் மூலம் வேறு செயற்பாடுகளுக்காக வழங்கப்படுவதை முன்கூட்டியே தடுப்பதற்கான பிரேரணையானது மட்டக்களப்பு மாநகர முதல்வரால் சபையில் முன்வைக்கப்பட்டது.

மாந்தீவு பிரதேசத்தில் உள்ள காணிகளை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதற்கான நகர்வுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மட்டக்களப்பில் இயற்கை வனப்புடன் கூடிய ஒரு பிரதேசமாகவும், பல்வேறு வகையான பறவைகள் வந்து தங்கிச் செல்கின்ற இடமாகவும் இப்பிரதேசம் அமைந்துள்ளதனால் எதிர்காலத்தில் இலங்கைக்கு வருகை தருகின்ற உல்லாசப் பயணிகளை ஈர்க்கின்ற இடமாகவும் மட்டக்களப்பு வாவியின் ஊடாக உல்லாசப் பயணிகள் படகு மூலம் சென்று அப்பகுதியின் அழகினை ரசித்து வருவதற்கான முன்னெடுப்புகளும் நடைமுறையில் உள்ளதாகவும் மாநகர முதல்வர் தெரிவித்தார். 

எனவே இப்படியான இயற்கை வனப்புடன் கூடிய வளம்மிக்க எமக்குரிய இப்பிரதேசத்தை  எந்த அரச, அரசசார்பற்ற அமைப்பினருக்கும் ஒப்பந்தம் மூலம் வேறு செயற்பாடுகளுக்காக வழங்கப்படுவதை முன்கூட்டியே தடுப்பதற்கான சபை அனுமதியை கோருவதாகவும் வேண்டுகோள் விடுத்தார். 

இதனைத் தொடர்ந்து மேற்படி முன்மொழிவானது சபையில் அமர்ந்திருந்த அனைத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.