இரு வைத்தியசாலைகள் தனிமைப்படுத்தல் வைத்தியசாலையாக பிரகடனம் -கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர்


சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைகளின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பாலமுனை வைத்தியசாலையும் மருதமுனை வைத்தியசாலையும் தனிமைப்படுத்தல் வைத்தியசாலையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24மணித்தியாலங்களில் 58பேர் கொரனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் இன்று வரையில் ஒன்பதாக அதிகரித்துள்ளதாகவும் இறுதியாக ஏற்பட்ட மரணம் அம்பாறை உகனைப்பகுதியில் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த வாரம் கிழக்கு மாகாணத்தில் சிவப்பு வலயங்களாக காத்தான்குடி,திருகோணமலை நகர்,கல்முனை தெற்கு,சாய்ந்தமருது,அட்டாளைச்சேனை,உகன,மட்டக்களப்பு ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் இனங்காணப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தின் மூன்று பகுதிகள் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்பட்டுவருகின்றது.கல்முனை பிராந்தியத்தில் கல்முனை நகரில் சில கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளும் மட்டக்கள்பு மாவட்டத்தில் காத்தான்குடி நகரசபை பகுதியும் திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை நகரில் உள்ள சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக இருந்துவருகின்றது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் எவ்வாறு எங்களுக்கு ஒத்துழைப்புகளை வழங்குகின்றார்கள் என்ற வகையிலும் அந்த தொற்றானது எவ்வாறு வியாபித்துள்ளது பரவுகின்றது என்ற வகையிலும் தங்கியுள்ளது எவ்வளது காலத்திற்கு இந்த தனிமைப்படுத்தலை முன்னெடுப்பது என்பது.இதனை அறிந்துகொள்வதற்காக தொடர்ச்சியாக சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார்.இராணுவத்தினர்,பிரதேச செயலாளர்களுடன் இணைந்து தொடர்ச்சியாக தேடுதல்களையும் பீசிஆர் பரிசோதனைகளையும் முன்னெடுத்துவருகின்றோம்.மக்கள் பூரணமான ஒத்துழைப்பினை வழங்கும்பட்சத்தில் எங்களால் அப்பகுதியில் தொற்றுக்களின் அளவு எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்துதான் எதிர்வரும் காலங்களில் தனிமைப்படுத்தல் தொடர்பில் தீர்மானிக்கமுடியும்.

விசேடமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் சுகாதார துறையினருக்கும் கொரனா தொடர்பாக செயற்படும் அனைத்து தரப்பினர்களுக்கும் ஒத்துழைப்பினை பூரணமாக வழங்கும்போதுதான் தனிமைப்படுத்தலை நீக்க விரைவில் தனிமைப்படுத்தலை நீக்கி,தொற்றினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அந்த தொற்றினை கிழக்கில் இருந்து இல்லாமல்செய்யமுடியும்.சில இடங்களில் மக்களின் பங்களிப்பு திருப்திகரமாகயில்லை.இருப்பினும் சில முன்னேற்றங்கள் காணப்படுகின்றன.

அதேவேளை கொழும் உட்பட புறநகர் பகுதிகளில் இருந்துவருகின்றவர்களையும் தாங்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளவேண்டும்.சுகாதார உத்தியோகத்தர் ஊடாகவோ அல்லது கொரனா தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் ஊடாகவோ தங்களை அடையாளப்படுத்துவதன் மூலம் உங்களையும் பாதுகாத்து குடும்ப உறுப்பினர்களையும் ஏனையர்களையும் பாதுகாக்கமுடியும்.

திருகோணமலை மாவட்டத்தில் இதுவரையில் 193நபர்கள் தொற்றுள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் 332 நபர்கள் தொற்று அடையாளம் காணப்பட்டு;ளளனர்.அம்பாறை பிராந்தியத்தில் 53நபர்களும் கல்முனை பிராந்தியத்தில் 915நபர்களும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதுவரையில் கிழக்கு மாகாணத்தில் பெறப்பட்ட 1493நபர்களில் 595நபர்கள் தொடர்ச்சியாக சிகிச்சைபெற்றுவரும் நிலையில் 915நபர்கள் குணமடைந்து வீடு சென்றுள்ளார்கள்.தொற்றின் அளவு கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக அதிகரித்துச்செல்கின்றது.சுகாதார துறையினர் வழங்கும் அறிவுறுத்தல்களை காத்திரமாகவும் பொறுப்புணர்ச்சியுடனும் மக்கள் கட்டாயமாக கடைப்பிடிக்கவேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் கொரனாவுக்கு இணையாக டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்துவருகின்றது.இரண்டும் தொற்று நோய்கள்.ஆனால் இரண்டு நோய்களுக்குமான தடுப்பு நடவடிக்கைகள் வேறுவேறாக காணப்படுகின்றது.ஒரு இக்கட்டான நிலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டிய நிலையில் உள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் 09 வைத்தியசாலைகளில் கொரனா தொற்றாளர்களை பராமரித்துவருகின்றோம்.மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை,கரடினாறு மாவட்ட வைத்தியசாலை,பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலையென மூன்று வைத்தியசாலைகள் மட்டக்களப்பு மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலை,குச்சவெளி பிரதேச வைத்தியசாலை ஆகிய இரண்டு வைத்தியசாலைகளும்,அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிராந்தியத்தில் அண்மையில் பாலமுனை வைத்தியசாலையில் ஏற்பட்ட சில சட்ட பிரச்சினைகள் காரணமாக அந்த வைத்தியசாலைக்கு இருந்த அனுமதியை தற்காலிமாக மூடவேண்டிய நிலையேற்பட்டது.

ஆனாலும் நேற்று சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைகளின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பாலமுனை வைத்தியசாலையும் மருதமுனை வைத்தியசாலையும் விசேட தனிமைப்படுத்தல் வைத்தியசாலையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.அது எங்களுக்கு எதிர்காலத்தில் பாரிய உதவியாக இருக்கும்.

அம்பாறை பிராந்தியத்தில் பதியத்தலாவை,தமன வைத்தியசாலைகள் கொரனா வைத்தியசாலைகளாக தெரிவுசெய்யப்பட்டுள்ளன.கிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாண மக்கள் மட்டுமன்றி இலங்கையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இருந்து 2795நபர்கள் உள்வாஙகப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.அதில் 2262நபர்களை சுகப்படுத்தி வீடுகளுக்கு அனுப்பியுள்ளோம்.15நபர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றீடுசெய்யப்பட்டுள்ளனர்.தற்போது 518நபர்கள் தொடர்ச்சியாக சிகிச்சைபெற்றுவருகின்றனா.