போரதீவுப்பற்றுபிரதேச சபைக்குட்பட்ட பழுகாமம் பகுதியில் தேசிய நீர் வடிகால் குழாயில் ஏற்பட்ட கசிவு சீர்செய்யப்பட்டு நேற்று மாலை முதல் நீர்விநியோக திட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.
போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட பெரியபோரதீவு பிரதான வீதி ஊடாக பழுகாமத்துக்கு செல்லும் தேசிய நீர் வடிகாலமைப்பு குச் சொந்தமான பிரதான நீர்க்குழாயில் மூன்று தினங்களாக நீர்க்கசிவு ஏற்பட்ட காரணத்தினால் பழுகாமத்துக்கு பகுதி மக்கள் குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவந்தனர்.
இது தொடர்பில் தேசிய நீர் வடிகால் அமைப்பு சபையின் களுவாஞ்சிகுடி நிலையத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதை தொடர்ந்து குறித்த நீர்க்கசிவினை சீர்செய்யும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
களுவாஞ்சிகுடி தேசிய நீர் வடிகால் அமைப்புப் பொறுப்பதிகாரி சி.சஞ்சிவ் தலைமையில் போரதீவுப்பற்று பிரதேசசபை கனரக வாகன உதவியுடன் திருத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.