பெரியகல்லாறில் ஐவருக்கு கொரனா தொற்று உறுதி –சுகாதார துறையினர் தீவிரம்

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் ஐந்து பேர் கொரனா தொற்றுக்குள்ளானது கண்டறியப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

இன்று காலை கொழும்பில் இருந்து சென்று மட்டக்களப்பு,தேற்றாத்தீவு பகுதியில் இடம்பெற்ற விபத்துக்குள்ளானவர்கள் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர்கள் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்;டபோது இருவருக்கு கொரனா தொற்று உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து பெரியகல்லாறில் உள்ள உறவினர்கள் சிலரும் இன்றும் அன்டிஜன் சோதனைக்குட்படுத்தப்பட்டு அதில் மூவருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

இதில் பாடசாலை மாணவியும் அடங்குவதாகவும் கொரனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

பெரியகல்லாறு பகுதியில் பொதுச்சுகாதார பரிசோதகர்களும் பொலிஸார் மற்றும் இராணுத்தினர் இணைந்து தொடர்ந்து தொற்றாளர்களுடன் தொடர்புகொண்டவர்களை இனங்கண்டு தனிமைப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதுடன் பீசிஆர் பரிசோதனைகளையும் முன்னெடுத்துவருகின்றனர்.