வெள்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு மாவட்டம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் பல பகுதிகளுக்கான போக்குவரத்துகளும் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரில் நேற்றுக் (21) காலை 8.30மணிமுதல் இன்று (22) காலை 8.30 மணி வரையான 24 மணி நேரத்தினுள் 150.7 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதோடு வாகரையில் 214.7 மி.மீ பதிவாகியுள்ளதாக வானிலை அவதானம் நிலையம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் மட்டக்களப்பு நகர் உட்பட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக மட்டக்களப்பு நகரின் தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதை காணமுடிகின்றது.

மட்டக்களப்பு நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் குடியிருப்புகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுவதன் காரணமாக மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.

குறிப்பாக நாவற்குடா, நொச்சிமுனை, பூநொச்சிமுனை, வேலூர்,கூழாவடி, மாமாங்கம்,கறுவப்பங்கேணி,சீலாமுனை,உப்போடை,இருதயபுரம் என மாநகரத்திற்குட்பட்ட பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் பல பகுதிகளில் பயணிக்கமுடியாத சூழ்நிலையேற்பட்டுள்ளது.

இதேநேரம் மட்டக்களப்பு மாநகரசபையினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள நீரை வழிந்தோடச்செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்கள் இடம்பெயரும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

படுவான்கரையின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மண்டூர்-வெல்லாவெளி,வவுணதீவு-மட்டக்களப்பு,மட்டக்களப்பு-கொக்கட்டிச்சோலை பிரதான வீதிகள் ஊடாக வெள்ள நீர் பாய்வதன் காரணமாக போக்குவரத்து செய்பதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

இதேவேளை பெய்துவரும் மழை காரணமாக வயல் நிலங்களும் பெருமளவில் அழிவடைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

முகத்துவாரம் கடந்த இரண்டு மாதங்களுக்கு வெட்டப்பட்டுள்ளதன் காரணமாக வெள்ள நீர் கடலுக்குள் செல்லும் நிலையுள்ளதனால் வெள்ள நிலைமை குறையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளபோதிலும் தொடர்ந்தும் மழை பெய்வதன் காரணமாக வெள்ள நிலைமை அதிகரித்துவருகின்றது.