கிழக்கில் அதிகரிக்கும் கொரனா தொற்றாளர்கள் -சுகாதார வழிமுறையை பேணுமாறு டாக்டர் லதாகரன் வேண்டுகோள்


கடந்த 12மணித்தியாலங்களுக்குள் கிழக்கு மாகாணத்தில் 30 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 994பேர் கொரனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பெகலியகொட மீன்சந்தை கொத்தணியின் பிற்பாடு இன்று காலைவரை பிசிஆர்,அன்டிஜன் பரிசோதனைகளின் பிரகாரம் 994பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அவர்களுள் கடந்த 12மணித்தியாலங்களுக்குள் 30நபர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். 

கிண்ணியா பகுதியில் ஒருவரும் மூதூர் பகுதியில் ஆறு நபர்களும் திருகோணமலை பகுதியில் இரண்டு நபர்களும் சாய்ந்தமருது பகுதியில் ஒருவரும் அட்டாளைச்சேனை பகுதியில் ஐந்து நபர்களும் பொத்துவில் பகுதியில் ஆறு நபர்களும் காத்தான்குடி பகுதியில் ஏழு நபர்களும் ஆரையம்பதியில் ஒரு நபரும் அம்பாறை உகனவில் ஒரு நபருமாக மொத்தமாக 30நபர்கள் தொற்றாளர்களாக பிசிஆர்,அன்டிஜன் பரிசோதனைகளின் பிரகாரம் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

மாவட்டங்கள் வாரியாக பார்க்கின்றபோது பெகலியகொட மீன்சந்தை கொத்தணியின் பிற்பாடு திருகோணமலை மாவட்டத்தில் 122நபர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் 131 நபர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்கள். அம்பாறை மாவட்டத்தில் 24நபர்களும் கல்முனை பிராந்தியத்தில் 717நபர்களுமாக மொத்தமாக 994நபர்கள் பெகலியகொட மீன்சந்தை கொத்தணியின் பிற்பாடு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்கள்.

கொவிட் தொற்று ஏற்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 528நபர்கள் குணமடைந்துள்ளார்கள்.485நபர்கள் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்றுவருகின்றார்கள். 5மரணங்கள் நிகழ்ந்துள்ளன.5மரணங்களில் 4மரணங்கள் கல்முனை பிராந்தியத்திலும் ஒரு மரணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பகுதியிலும் பதிவாகியுள்ளது.

பெகலியகொட மீன்சந்தை கொத்தணியின் பிற்பாடு இதுவரை வைத்தியசாலைகளில் 2268நபர்கள் உள்வாங்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுள் 1763நபர்கள் பூரண குணமடைந்து சென்றுள்ளனர். 11நபர்களை நாங்கள் இடமாற்றியுள்ளோம். 

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, கல்முனை,திருகோணமலை பகுதிகளை எடுத்துக்கொண்டால் கொவிட் தொற்றானது ஆங்காங்கே அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. கல்முனை பிராந்தியத்தில் அக்கரைப்பற்று பொதுச் சந்தையில் உருவான உபகொத்தணியின் அளவானது மிகக்குறைந்துகொண்டு வருகின்றது. இன்றோ நாளையோ அந்தப் பிரதேசத்தை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சியை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டிருக்கின்றார்கள். 

அதேவேளை கல்முனை நகரை அண்டிய பகுதிகளில் ஆங்காங்கே பல இடங்களில் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டு வருகின்றனர். இருந்தும் அங்கு எங்களால் செய்யப்படுகின்ற பிசிஆர்,அன்டிஜன் பரிசோதனைகளின் அளவில் சிறிய பின்தங்கல் இருக்கின்றது. இருப்பினும் அங்குள்ள மக்களுக்கு மிகவிரைவில் பிசிஆர்,அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டு அந்த பிரதேச மக்களையும் அந்தப் பிரதேசத்தை அண்டியுள்ள பகுதி மக்களையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்திருக்கின்றோம். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவில் பெரியகல்லாறு பகுதியில் 17பேர் தொற்றுடையவர்களாக அடையாளங்கண்டிருக்கின்றோம். அதேநேரம் தொற்றாளர்களில் 12நபர்களை வைத்தியசாலைகளில் அனுமதிப்பதற்கு அணுகியபோது எந்த வைத்தியசாலைகளிலும் இடவசதி காணப்படாமையினால் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார திணைக்களம் மிகவிரைவாக செயற்பட்டு அந்த 12நபர்களையும் வைத்தியசாலைகளில் உள்வாங்குகின்ற செயற்பாட்டில் முதற்கட்டமாக உடனடியாக 10நபர்களை பெரியகல்லாறு வைத்தியசாலையில் உள்வாங்கியிருக்கின்றோம். அந்த வைத்தியசாலையில் கட்டில்களுக்கு தட்டுப்பாடு காணப்படுகின்றபட்சத்திலும் இருக்கின்ற வளங்களை வைத்து உடனடியாக அந்தப் பிரதேசத்திலிருக்கின்;;;ற மக்களுக்கு அங்கு சிகிச்சை வழங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்தியிருக்கின்றோம். 

திருகோணமலை நகர் பகுதியில் ஜின்னாநகர்,மூருகாபுரி,அபேபுர ஆகிய மூன்று கிராமசேவகர் பிரிவுகள் தற்போது தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழ் தனிமைப்படுத்தலில் உள்ளது. அந்தப்பகுதிகளிலும் தொடர்ச்சியாக எமது சுகாதார உத்தியோகத்தர்கள் பொலிஸ் மற்றும் இராணுவத்துடன் இணைந்து மாவட்ட செயலாளர்,பிரதேச செயலாளர்களுடன் சேர்ந்து கொவிட் தொற்றினை தடுக்கின்ற வழிமுறைகளை தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்கின்றார்கள். மூதூர் பகுதியிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. கடந்த 12மணித்தியாலத்திற்குள் 6பேர் தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டிருக்கின்றார்கள். மூதூர் வைத்தியசாலையை சேர்ந்த சுகாதார ஊழியர்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அந்த வைத்தியசாலையில் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுற்றுநிருபத்திற்கமைய அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து சேவைகள் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இருப்பினும் கொவிட் தொற்றானது பிறருக்கு பரவாத வண்ணம் உரிய நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டிருக்கின்றோம். 

காத்தான்குடியில் கடந்த பன்னிரண்டு மணித்தியாலங்களுக்குள் 7நபர்கள் தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டிருக்கின்றார்கள். ஏற்கனவே தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டவர்களின் உறவினர்கள்,அவர்களோடு சம்பந்தப்பட்டவர்களை தேடிச்சென்று நாங்கள் பரிசோதனைகளை மேற்கொண்டபோதே இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றார்கள். இருப்பினும் காத்தான்குடி பகுதியில் இன்னும்பலர் தொற்றுள்ளவர்களாக காணப்படலாம். ஆனால் எத்தனைபேர் என்பதை என்னால் குறிப்பிட்டு கூறமுடியாது. 

மட்டக்களப்பு பிராந்திய பணிமனையில் அனைத்துவிதமான சுகாதார அதிகாரிகளையும் அவசரமாக அழைத்து இது தொடர்பாக எங்களால் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும், எதிர்வரும் காலங்களில் பெரியகல்லாறோ அல்லது காத்தான்குடியோ இவ்வாறான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அதற்குரிய தடயங்கள் காணப்படும் பட்சத்தில் அந்தப் பிரதேசத்தின் குறிப்பிட்ட பகுதிகளை நாங்கள் தனிமைப்படுத்துவதா,இல்லையா என்ற ரீதியில் எங்களது கலந்துரையாடல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. கலந்தாலோசித்து எதிர்வரும் காலங்களில் எவ்வாறு கொவிட் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதை தீர்மானிக்கவிருக்கின்றோம். 

கொவிட்டானது தொற்றப்பட்ட 14நாட்களுக்குள் அதன் நோயரும்புகாலம் இருக்கும். 14நாட்களுக்குள் எங்களை சந்தித்தவர்கள் யார் யார் என்பதை சொல்வது கடினமான விடயமாகும். விபத்தின்போது காயமுற்றவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தபோது அவர்கள் தொற்றுள்ளவர்களாக ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்டனர்.அதன்பின்பு அவர்களுடன் சம்பந்தப்பட்டவர்களை பொதுச் சுகாதார பரிசோதகர்களும் சுகாதார ஊழியர்களும் சுகாதார வைத்திய அதிகாரியும் சென்று அவர்கள் நேரடியாக தொடர்புபட்டவர்கள் என்பதை அடையாளம் கண்டு பரிசோதனைகளை மேற்கொண்டபோதுதான் கொவிட் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நபர் அக்கரைப்பற்றிற்கு சென்று வந்த சம்பவமும் இருக்கின்றது. ஆனால் அவருடன் சம்பந்தப்படாது பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட 15நபர்களுள் ஒருவர் கல்முனைக்கோ கொழும்பிற்கோ சென்று வந்திருக்கலாம். ஆகவே இது தொடர்பில் உறுதியாக எதனையும் கூறமுடியாது.