இந்துக்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விரதமான திருக்கார்த்திகையை முன்னிட்டு ஆலயங்கள் வீடுகளில் இன்று தீபங்கள் ஏற்றப்பட்டு விசேட வழிபாடுகள் நடாத்தப்பட்டன.
கொரனா என்னும் தொற்று நாட்டை உலுக்கிக்கொண்டிருக்கும் நிலையில் ஏற்றப்படும் விளக்கின் ஒளியில் கொரனா வைரஸ் அழிய பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் இன்று விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் வீடுகளிலும் கார்த்திகை தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகையை முன்னிட்டு விசேடபூஜைகள் மற்றும் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்களின் தலைமையில் இந்த பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றியதாக ஆலய நிர்வாகத்தினர் மற்றும் உபயகாரர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு திருக்கார்த்தினை வழிபாடு முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது மாமாங்கேஸ்வரருக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்று சுவாமி ஊர்வலதாக வந்து ஆலய முன்றிலில் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை அருகில் விசேட பூஜைகள் நடைபெற்று அவை எரிக்கப்பட்டன.
திருக்கார்த்திகையினை முன்னிட்டு ஆலயத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளியூட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.