அம்பாறை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரனா தொற்றாளர்கள் -பாடசாலைகளுக்கும் மூடு


கிழக்கு மாகாண ஆளுனரின் அறிவுரைகளுக்கு அமைவாகவும் சுகாதார திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைவாகவும் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் அனைத்தும் இன்று முதல் மூடப்படுவதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட கொரனா செயலணி கூட்டணியை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பகுதியில் தொடர்ச்சியான பீசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இதுவரையில் 250க்கும் மேற்பட்டவர்களிடம் பீசிஆர் பரிசோனைகள் செய்யப்பட்டுள்ள நிலையில் அதிகளவான கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் நுழையும் ஆறு இடங்கள் ஊடாக தீவிர சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாடசாலை ஆரம்பிப்பதற்கு மட்டுமே அனுமதிவழங்கப்பட்டுள்ளதாகவும் வேறு எந்த செயற்பாடுகளுக்கும் அனுமதிவழங்கப்படவில்லையெனவும் சிலர் தனியார் வகுப்புகளை நடாத்துவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவ்வாறு யாரும் வகுப்புகளை நடாத்தினால் குறித்த ஆசிரியரும் மாணவர்களுக்கும் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் பணிப்பாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் தனியார் மற்றும் பிரத்தியேக வகுப்புகளை நடாத்துவதாகவும் அவை உடனடியாக இடைநிறுத்தப்படவேண்டுமெனவும் அவ்வாறு இல்லாவிட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் தொழில்வாய்ப்பற்றவர்களுக்கு உதவிகள் வழங்குவதற்கு அரசாங்கம் 158மில்லியன் ரூபாவினை ஒதுக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.