மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் சப்ரிகம திட்டத்தில் பல வீதிகள் புனரமைப்பு


மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல வீதிகள் சப்ரிகம வேலைத்திட்டத்தின் கீழ் கொங்கிறீட் வீதிகளாக புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

ஜனாதிபதியின் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் கிராம சேவையாளர் பிரிவுகள் தோறும் இரண்டு மில்லியன் ரூபா செலவில் வீதிகள் புனரமைக்கப்பட்டுவருகின்றன.

இதன் கீழ் இருதயபுரம் கிழக்கு விஜயபுரம் கிராமத்தில் விஜயபுரம் 05ஆம் குறுக்கு வீதி கொங்கிறீட் இட்டு புனரமைக்கும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

இரண்டு மில்லியன் ரூபா செலவில் இந்த வீதிக்கான புனரமைப்பு பணிகள் சப்ரிகம வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான கு.காந்தராஜா,திருமதி சுசிகலா அருள்ராஜ்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர் திலீப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நீண்டகாலமாக மக்கள் போக்குவரத்துச்செய்வதற்கு பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவந்த நிலையில் இந்த பாதை புனரமைக்கப்பட்டதற்கு பிரதேச மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.