கிழக்கினை அச்சுறுத்தும் கொரனா- கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளரின் வேண்டுகோள்


கிழக்கு மாகாணத்தில் 27பேர் கொரனா தொற்றுக்குள்ளானது இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையினை தொடர்ந்து பேலியகொட மீன் சந்தையில் ஏற்பட்ட கொரனா கொத்தணி பரவல் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புபட்டவர்கள் அடையாளப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் 06பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11பேரும் கல்முனை பிராந்தியத்தில் 08பேரும் வேறு வழிமுறையில் தொற்றுக்குள்ளான ஒருவரும் கொரனா தொற்றியுள்ளதாக இன்று உறுதிப்படுத்திய அதேவேளை நேற்று அம்பாறை சுகாதார பணிமனைக்குட்பட்ட தெவிலிப்பிட்டிய பகுதியில் பொது நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவருக்கு கொரனா தொற்று உள்ளது உறுதிப்படுத்தப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் 25பேர் நேற்று அடையாளம் காணப்பட்டு பீசிஆர்சி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஆறு பேர் உறுதிப்படுத்தப்பட்டனர்.இப்பகுதியில் மேலும் பலர் இருக்கலாம் என்ற அடிப்படையில் அவர்களையும் தேடி கண்டுபிடித்து பீசிஆர்சி பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இவ்வாறு 150க்கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அவர்கள் அனைவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டு அந்ததந்த காலத்திற்கு ஏற்ற வகையில் பீசிஆர்சி பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்திருக்கின்றோம்.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதானமாக வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி பிரதேசத்தில் இந்த மீன்சந்தையுடன் தொடர்புடையவர்கள் 65பேர் அடையாளம் காணப்பட்டார்கள்.இந்த 65பேரில் 25பேருக்கு நேற்று பீசிஆர்சி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இவர்களில் 11பேருக்கு கொவிட் 19 உள்ளதாக அடையாளம் காணப்பட்டது.ஏனைய 40பேருக்கும் இன்றும் நாளையும் பீசிஆர்சி பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இருந்தபோதிலும் அனைவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோன்று கல்முனையில் 34பேர் அடையாளப்படுத்தப்பட்டு அவர்களில் 17பேருக்கு பீசிஆர்சி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இவர்களில் எட்டுப்பேருக்கு கொவிட் 19 உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது.இந்த கொவிட் 19இன் தாக்கம் ஒரு குறித்த பகுதிக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை தொடக்கம் பொத்துவில் வரையில் இதன் தாக்கம் காணப்படுகின்றது.

கண்ணுக்கு தெரிந்த,அறிந்தவர்களையே நாங்கள் நாடிச்சென்று சோதனை முன்னெடுத்துள்ளோம்.எங்களுக்கு தெரியாமல் பலர் தொற்றுடன் காணப்படலாம்.நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால் யாராவது நபர்கள் பேலியகொட மீன்சந்தையில் நேரடியாக தொடர்புபட்டவர்களாக இருந்தால் அல்லது அவர்களை நீங்கள் யாராவது அடையாளம் கண்டால் உடனடியாக அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கோ அல்லது பொதுச்சுகாதார பரிசோதகருக்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ உடனடியாக அறிவிக்கவும்.

ஆரம்பத்திலேயே நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் சரியான வகையிலும் அனைவரையும் அடையாளப்படுத்தி மேற்கொள்ளும்போது இந்த தொற்றும் வீரியத்தினையும் பரவும் அளவினையும் கட்டுப்படுத்தமுடியும்.இனிவரும் காலங்கள் மிகவும் சவாலான காலங்கள்.கிழக்கு மாகாணத்திலும் தொற்று பரவ ஆரம்பித்திருக்கின்றது.

கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் நாங்கள் போராடிக்கொண்டிருக்கின்றோம். இதனை சுகாதார திணைக்களத்தினாலோ பொலிஸாரினாலோ பாதுகாப்பு தரப்பினராலோ மட்டும் கட்டுப்படுத்தமுடியாது.ஊடகத்துறையினரும் பொதுமக்களும் இணைந்து சுமுகமான முறையில் மிக அவதானமாக நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது இந்த கொவிட் தொற்றின் அளவினை நாங்கள் நிச்சயமாக கட்டுப்படுத்தி அதற்குரிய நடவடிக்கைகளை எங்களால் மேற்கொள்ளமுடியும்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் தனிநபர் சுகாதார நடைமுறைகளை நாங்கள் சரியான முறையில் கடைப்பிடிக்கும்பட்சத்தில் இந்த தொற்றில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளமுடியும்.முகக்கவசங்கள் அணிதல்,தனிநபர் இடைவெளிகளைப்பேணுதல்,கைகளை நன்கு கழுவுதல் வேண்டும்.சுகாதார தொற்றினை தடுக்கும் பல வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படவேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் அனைத்துவிதமான ஒன்றுகூடலுக்கும் இன்றுமுதல் தடைவிதிக்கப்படுகின்றது.இதனைமீறி எங்காவது ஒன்றுகூடல் நடைபெற்றால் அதற்குரிய சட்ட நடவடிக்கைகளை அப்பகுதி பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்வார்கள்.

அத்துடன் பொதுமக்கள் வைத்தியசாலைகளுக்கு தேவையில்லாமல்செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.அத்துடன் வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்கு செல்லும்போது கொரனாவிற்குரிய அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலையில் உருவாக்கப்பட்டுள்ள கொவிட் அலகுக்கு சென்று பரிசோதனைகளை செய்யமுடியும்.இவ்வாறு செய்யும்போது உங்களிடம் உள்ள தொற்றினை அடையாளம் காணமுடியும் என்பதுடன் வைத்தியசாலை ஊழியர்களுக்கு தொற்றுகள் ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ளமுடியும்.

இந்த தொற்று தொடரும் நிலையில் வைத்தியசாலைகளின் ஊழியர்கள் தொடர்ந்து பாதிக்கப்படும் நிலையேற்படுமானால் எதிர்காலத்தில் வைத்தியசேவைகள் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளும்சூழ்நிலையேற்படலாம்.அதனை தவிர்க்கும் வகையில் தேவையில்லாமல் வைத்தியசாலைக்கு வந்துசெல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

தயவுசெய்து கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை வெளியிடுவது என்பது அவர்களை ஒரு மன உளைச்சலுக்குள்ளாக்கும் நிலையுறுவாகும்.அத்துடன் ஒருவர் தொற்றினால் பாதிக்கப்படும்போது முன்வந்து சொல்வதற்கு தயங்கும் நிலையுருவாகும்.