அதிகூடிய பாதுகாப்புடன் பரீட்சைகள்!

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசல் பரீட்சை, உயர்தர பரீட்சைகள் அதி கூடிய பாதுகாப்பு மட்டத்தில் நடத்தப்படும் என்பதுடன், பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை கண்காணிப்பதற்கு இணையவழி ஊடாக விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா மேலும் தெரிவிக்கையில்,

நெருக்கடியான நிலையில் பரீட்சைகளை நடத்த கல்வி அமைச்சும், பரீட்சைகள் திணைக்களமும் எந்நிலையிலும் தயாராகவே இருக்கும்.

டெங்கு, இயற்கை அனர்த்தம் ஏற்படும் காலக்கட்டத்திலும் தேசிய பரீட்சைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம்.

பொதுத்தேர்தல் கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவல் வேளையில் கோடிக்கணக்கான மக்கள் பங்குப்பற்றுதலுடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இரண்டு பிரதான பரீட்சைகள் இலட்சக்கணக்கான மாணவர்களை உள்ளடக்கி மிகவும் பாதுகாப்பான முறையில் நடத்துவது சாத்தியமானதே.

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் தரவு, மற்றும் அவர்களின் சுய தகவல்களை கண்காணிப்பதற்கு இணைய வழி ஊடாக விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்தில் பாடசாலை அதிபர்கள் முதல் தரப்பினராக இணைத்துக்கொள்ளப்படுவார்கள். திட்டமிடப்பட்ட வகையில் பரீட்சையை நடத்த இறுதி தீர்மானம் எடுத்தமை முதல் வெற்றியாகும்.

பரீட்சைகள் உயர் சுகாதார பாதுகாப்பு மட்டத்தில் நடத்தப்படும், ஏனெனில் கொவிட் - 19 வைரஸ் பரவலுடன் வாழ வேண்டிய சூழ்நிலையே காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்.