திராய்மடுவில் இளைஞர் விவசாய பண்ணை திறந்துவைப்பு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திராய்மடு பகுதியில் இளைஞர்களின் வாழ்வாதாரத்தினை நோக்காகக்கொண்ட விவசாய பண்ணை நேற்று மாலை திறந்துவைக்கப்பட்டது.

யுனிசேப் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபையின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மண்முனை வடக்கு இளைஞர் சம்மேளனத்தினால் இந்த விவசாய பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை திறந்துவைக்கும் நிகழ்வு நேற்று மாலை மண்முனை வடக்கு இளைஞர் சம்மேளனத்தின் தலைவரும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான சஞ்சித் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,கிழக்கு மாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மணிவண்ணன்,யுனிசேப் அமைப்பின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி தீம் சட்டன்,சிரேஸ்ட திட்ட வரைஞர் லூயிஸ் மொரீரா டானியல்,மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,செரி நிறுவனத்தின் தேசிய திட்ட பணிப்பாளர் வி.தர்சன,மாநகர அணையாளர் சித்திரவேல்; உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சிறுவர் நேய மாநகரை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இளைஞர்களை ஒன்றுதிரட்டும் நோக்குடனும் இளைஞர்களினை தேசிய உற்பத்திக்கு பயன்படுத்தும் நோக்கிலும் இந்த விவசாய பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது.

ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் பல்வேறு உற்பத்திகளைக்கொண்டதாக இந்த விவசாய பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.இதன்போது பயன்தரு மரக்கன்றுகளும் நடப்பட்டன.

இந்த இளைஞர்களின் விவசாய பண்ணையின் மூலம் உள்ளுர் உற்பத்திகளை அதிகரிக்கமுடியும் என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

இங்கு உற்பத்திசெய்யப்படும் உற்பத்திகள் இந்த மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.