வேத்துச்சேனையில் தொல்பொருளின் பெயரால் அத்துமீறல் -கிளர்ந்தெழுந்த மக்கள்

(வெல்லாவெளி நிருபர்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி வேத்துச்சேனை கிராமத்தில்  தொல்பொருள் பிரதேசமாக அடையாளப்படுத்துவதை எதிர்த்து பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் இன்று காலை முதல் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு  போரதீவுப்பற்று  வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட  வேத்துச்சேனை கிராமத்தில்  தொல்பொருள் பிரதேசமாக அடையாளப்படுத்துவதை எதிர்த்து பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் இன்று ஞாயிற்றுகிழமை(5)காலை முதல் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி தலைமையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் இடங்களை அடையாளம் காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தொல்பொருள் செயலணி என சந்தேகிக்கப்படும் நபர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை (4)வேத்துசேனை கிராமத்தில் உள்ள புளியடி வைரவர் ஆலயம் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களை  பார்வையிட்டு சென்றததையடுத்து பொதுமக்கள்,கிராமவாசிகள் இதன்போது குழப்பநிலையினை அடைந்திருந்தனர்.

அதாவது குறித்த தமிழ் கிராமத்தில் பௌத்தமத ஆலயம் அமைக்கப்படலாம் என சந்தேகம் வெளியிட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு தமது பூர்வீக காணியை தொல் பொருள் இடமாக மாற்ற நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என தமது பலமான எதிர்ப்பை வெளியீட்டார்கள்.

இதனால் இன்றைய தினம் வேத்துச்சேனை கிராம மக்கள் குறித்த பகுதியில் எதிர்ப்பு நடவடிக்களை முன்னெடுக்க முற்பட்ட வேளையில் பொலிசார்மற்றும் பொதுமக்களிடையே பயங்கரமான முறுகல் நிலைமை ஏற்பட்டது.

குறித்த காணியானது தனியாருக்கு சொந்தமான காணியின் ஒரு பகுதியாகவும்  விளையாட்டு மைதானமாகவும்,மற்றையை பகுதி வேத்துச்சேனை புளியடி வைரவபர் ஆலயத்திற்காகவும் நீண்டகாலமாக பயன்படுத்தி வருகின்றார்கள்.அதனை தொல்பொருள் பகுதியாக அடையாளப்படுத்த அனுமதிக்கமாட்டோம் பொதுமக்கள் இவ் எதிர்ப்பை தெரிவித்தார்கள்.

இதன்போது அங்குவந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவருமான இரா.சாணக்கியன் மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இதன்போது சாணக்கியனுக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் நிலையேற்பட்டதுடன் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இதேநேரம் இங்கு வருகைதந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான வியாழேந்திரன்,மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் வேட்பாளர் அருண்தம்பிமுத்து ஆகியோர் வருகைதந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேசமுற்பட்டபோது ஆர்ப்பாட்டர்களுக்கும் அவர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன் அவர்களை பொதுமக்கள் அங்கிருந்துசெல்லுமாறு கோசங்களை எழுப்பினர்.

இதன்போது குறித்த சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சீ.யோகேஸ்வரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் யோ.ரஜனி ஆகியோர் ஆர்;ப்பாட்டத்திற்கு ஆதரவாக கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இதன்போது வெல்லாவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி,பொலிசார்,விஷேட அதிரடிப்படையினர்,இராணுவத்தினர் விஜயம் மேற்கொண்டு குறித்த சம்பவத்தை பார்வையிட்டதுடன் இவ்விடயமாக மக்களுடன் கலந்துரையாடினார்.

குறித்த ஆலயத்தில் இன்று ஒன்று திரண்டிய பொதுமக்கள் ஆலயத்தை துப்பரவு செய்து பூசை வழிபாட்டையும் மேற்கொண்டார்கள்.குறித்த பிரதேசத்தில் பொலிசார்,இராணுவத்தினர், தமது கடமைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.இன்றையதினம் மட்டக்களப்பு விகராதிபதி அம்பிட்டிய சுமணரத்ண தேரர் வேத்துச்சேனை கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்டநிலையில் அங்குள்ள பொதுமக்களால் அவ்விடத்தில் இருந்து திருப்பி அனுப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து அவ்விடத்தில் சுமூக நிலைமை ஏற்பட்டத்துடன் பொதுமக்கள் அவ்வாலயத்தில் வழமைபோன்று பூசை வழிபாட்டுகளை மேற்கொண்டனர்.