விடுதலைப்புலிகளை தோற்கடிக்க இந்தியாவின் உதவி பெறப்பட்டது –சம்பந்தன்

விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்காக இந்தியாவின் உதவியை பெறும்போது இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் பின்நிற்பதாகவும் இதற்கு இந்தியா என்ன செய்யப்போகின்றதது என்ற கேள்வியை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் எழுப்பினார்.

சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் அடிப்படையிலும் இலங்கையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச ஒப்பந்ததின் அடிப்படையிலும் இந்த நாட்டில் பிரச்சினையை தீர்ப்பதற்கு சர்வதேசத்தின் பங்களிப்புக்கு இடமுண்டு.அதனை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் பொதுக்கூட்டம் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன்,தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி என்.கே.சுமந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்,ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய சம்பந்தர்,
இலங்கைத் தீவில் அதிகூடிய தமிழ் மக்கள் வாழ்வது யாழ்ப்பாண மாவட்டத்திலாகும். இரண்டாவதாக மட்டக்களப்பு மாவட்டத்திலாகும். மட்டக்களப்பு மாவட்டமானது கிழக்கின் மத்தியிலுள்ள மாவட்டமாகும்.
வடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் மக்களுடைய பிரதேசம் என்பதை ஊர்ஜிதப்படுத்தி மட்டக்களப்பு மாவட்டம் நடுவில் நிற்கின்றது. இது முக்கியமான மிகவும் பெறுமதிமிக்க அம்சமாகும்.அது வடகிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதற்கு ஒரு அத்திவாரமாகும். அதை நாங்கள் பாதுகாக்க வேண்டும்.
தமிழ் மக்களின் போராட்டமானது மிக நீண்டபோராட்டம். இந்த நாட்டில் இடம்பெற்ற அநீதிகள் காரணமாக தமிழ் பேசும் மக்கள் இந்த நாட்டில் சமத்துவமாக வாழ்வதாக இருந்தால் இந்த நாட்டின் ஆட்சிமுறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படவேண்டும்,ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும்.அந்த அரசியலமைப்பு வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களுடைய இறையாண்மை,சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிக்கவேண்டும்.மத்தியில் குவிந்திருக்கும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டு அந்த அதிகாரங்களை மக்கள் தமது சொந்த விருப்பங்களுக்கு அமைவாக சட்டத்தினை ஆக்கும் அதிகாரம் நிhவாக அதிகாரத்தினை பயன்படுத்தி தமது விடயங்களை தாங்களே நிறைவேற்றுவதன் மூலமாக தங்களது அபிலாசைகளை தாங்களே நிறைவேற்றுவதன் ஊடாக தமது இறையான்மையினை முழுமையாக பயன்படுத்த நிலைமையேற்படுத்தவேண்டும்.
உலக நாடுகளில் பல நாடுகளில் பல்வேறு இன மக்கள் பல்வேறு மொழிகளை பின்பற்றுபவர்களாக இருக்கின்றார்கள்.பல்வேறு கலாசாரங்களை பின்பற்றுகின்றார்கள்.அங்கு எவ்வாறான ஆட்சிமுறைமைகள் அமைந்துள்ளதோ அவ்விதமான ஆட்சிமுறையொன்று இங்கு ஏற்படுத்தப்படவேண்டும்.
நாங்கள் நீண்ட போராட்டங்களை நடாத்தியுள்ளோம். பேச்சுவார்த்தைகள், ஓப்பந்தங்கள்,அகிம்சை ரீதியான போராட்டங்கள், ஆயுதப்போராட்டங்கள், இராஜதந்திர போராட்டம் என பல போராட்டங்களை நடத்தப்பட்டுவந்துள்ளன.1951ஆம் ஆண்டு பண்டா-செல்வா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டபோது.அதன்மூலம் பல விடயங்கள் வெளிவந்தன.1847 தொடக்கம் 1981ஆம் ஆண்டுக்கிடையில் நாடுபூராகவும் 838வீதமாக சிங்கள மக்களின் அதிகரிப்பு இருந்தன.கிழக்கு மாகாணத்தினை மாகாணத்தினை பொறுத்தவரையில் சிங்கள மக்களின் அதிகரிப்பு 888வீதமாக இருந்தது.மிக அதிகளவிலான குடியேற்றங்கள் கிழக்கின் அம்பாறையிலும் திருகோணமலையிலும் இடம்பெற்றன.
பண்டா-செல்வா ஒப்பந்தம் ஊடாக காணி அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்ததுடன் மாநிலங்களாக பிரிக்கப்பட்டு வடகிழக்குக்கு அதிகாரங்கள் வழங்கப்படவிருந்தன.வடமாகாணம் ஒரு மாநிலமாகவும் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையும் மட்டக்களப்பும் ஒரு மாநிலமாகவும் கல்முனை தொடக்கம் பொத்துவில் வரையில் ஒரு மாநிலமாகவும் அம்பாறை ஒரு மாநிலமாகவும் பிரிக்கப்பட்டு இந்த அதிகாரங்களை வழங்கயிருந்தன. அதுநிறைவேற்றப்படவில்லை.டட்லிசேனநாயக்கவுடனும் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது அதுவும் நிறைவேற்றப்படவில்லை.அது காணி தொடர்பான தெளிவான நிலைப்பாட்டினையும் வடகிழக்கில் தமிழ் மக்கள் வாழ்ந்துவருகின்றார்கள்,அது அவர்களின் சரித்திர ரீதியான தாயகம்.அது அங்கீகரிக்கப்படவேண்டும் என்ற கருத்து ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.ஆனால் நீண்டகால போராட்டத்தின் பின்னர் 1983ஆம்ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தின் காரணமாகவும் இந்திய பிரதமர் இந்திரகாந்தி தலையிட்டு நல்லிணக்க முயற்சிகளை மேற்கொண்டு பல்வேறு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.அதன் காரணமாக ராஜிவ்காந்தியின் காலத்தில் இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.அதில் சில விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.
இதன்மூலம் இலங்கையில் வெவ்வோறு மக்கள் வாழ்கின்றார்கள்,அவ்வொரு இன மக்களுக்கும் தனித்துவம் உண்டு.அந்த தனித்துவம்பேணி பாதுகாக்கப்படவேண்டும்.வடகிழக்கில் தமிழ் பேசும் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்துவந்துள்ளனர்.அந்த அடிப்படையில் வடகிழக்கு இணைக்கப்பட்டு ஒரு அதிகார அலகாக உருவாகவேண்டும்.இந்த ஒப்பந்ததின் அடிப்படையில் 13வது திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.அது முழுயான திருப்பதியை எமக்கிருக்கவில்லை.தமிழர் விடுதலைக்கூட்டணி அந்த விடயத்தினை மிகவம் கவனமாக பரிசீலித்தது.அதனை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று கூறிவிட்டுவந்தோம்.அதில் சட்ட அதிகாரத்தினை பொறுத்தவரையில் நிர்வாக அதிகாரத்தினை பொறுத்தவரையில் ஆளுனரின் அதிகாரங்களை பொறுத்தவரையில் இவ்வாறான காரணங்களினால் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால் நாங்கள் தொடர்ச்சியாக 13வது திருத்த சட்டம் ஊடாக அடைந்த முன்னேற்றத்தினை அதிகரிப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் நாங்கள் ஆட்சியமைக்கும் ஒவ்வொரு அரசாங்கத்துடனும்பேச்சுவார்த்தைகளை நடாத்தினோம்.சந்திரிகா அம்மையாரின் காலத்தில் புதிய அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்கு முன்னேற்றமான செயற்பாடுகளை முன்னெடுத்தோம்.
இதேபோன்று மகிந்த ராஜபக்ஸ காலத்தில் பல பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் அவர் நியமித்த சர்வகட்சி குழு என பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.2006ஆம்ஆண்டு சர்வகட்சி மற்றும் நிபுணர் குழுவினை அமைத்து அதியுட்ச அதிகார பகிர்வின் அடிப்படையில் இந்த பிரச்சினை தீர்க்கப்படவேண்டும்,அந்ததந்த பிராந்தியங்களில் வாழும் மக்கள் தங்களது பகுதிகளை தாங்களே தீர்மானிக்கவேண்டும் என்பவற்றினை தருவதாக மகிந்த ராஜபக்ஸ கூறினார்.ஆனால் அவை நிறைவேற்றப்படவில்லை.இது தொடர்பில் கடந்த பாராளுமன்ற அமர்வில் மகிந்தராஜபக்ஸ எதிர்க்கட்சியில் இருந்தபோது அவரிடம் நான் பாராளுமன்றில் வைத்து கேள்வியெழுப்பியபோது அவர் மௌனமாக இருந்தார்.அதனை அவர் மறுக்கவில்லை.மகிந்தராஜபக்ஸவின் நிபுணர்குழு அறிக்கை,சர்வகட்சி குழுவின் அறிக்கைகள் தெளிவான அறிக்கைகள்.
அதன் பிறகு மைத்திரிபால சிறிசேனவின் காலப்பகுதியில் பல முன்னேற்றகரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.ஆனால் அவை நிறைவேற்றப்படவும் இல்லை.அமுல்படுத்தப்படவுமில்லை.கடந்த 30வருடமாக அதிகார பகிர்வு,அரசியல் தீர்வு விடயமாக கனிசமான முன்னேற்றங்களை அடைந்திருக்கின்றோம்.அவை பதிவில் இருக்கின்றது.எவராலும் அவற்றினை மறுக்கமுடியாது.அதேபோன்று சர்வதேச சமூகத்திற்கும் தெரியும்.தமிழீழ விடுதலைப்புலிகளின்பேச்சுவார்த்தை நடைபெற்றபோது சில நாடுகள் கடமைபுரிந்தவர்கள்.அவர்களுக்கு அனைத்து விடயங்களும் தெரியும்.இந்த நிலையிலேயே இந்த பாராளுமுன்ற தேர்தல் வரவிருக்கின்றது.
இந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை எவ்விதமாக அமையப்போகின்றது என்ற கேள்வியே இன்று எழுந்துள்ளது.சர்வதேச ரீதியிலான மனித உரிமைகள் பிரகடனத்தின் அடிப்படையில் ஒரு நாட்டினை ஆட்சிபுரிவதற்கு ஒரு அரசாங்கம் உருவாக்கப்படுவதாக இருந்தால் அது மக்களின் ஜனநாயக தீர்ப்பின் அடிப்படையில் உருவாக்கப்படவேண்டும்.ஒரு அரசியல் அமைப்பு இருக்கவேண்டும்,அது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பாக இருக்கவேண்டும்.இந்த நாட்டில் ஒரு அரசியலமைப்பு இன்று இல்லை.அவ்விதமான அரசியலமைப்பு இல்லை.1956ஆம்ஆண்டு தொடக்கம் தந்தை செல்வாவின் கொள்கையின் அடிப்படையில் ஒவ்வொரு தேசிய தேர்தலிலும் இங்கிருந்த அரசியல் அமைப்பினை எதிர்த்துவந்துள்ளனர்.அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.கடந்த 65வருடமாக இலங்கையின் அரசியலமைப்பினை நாங்கள் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்துவருகின்றோம்.1994ஆம்ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் பின்னர் அரசியல் சாசனத்தினை தமிழ் நிராகரித்துள்ளனர்.ஜனநாயக ரீதியாக அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் அடிப்படையிலான ஆட்சி இந்த நாட்டில் இல்லை.இந்த நாட்டில் ஒரு அரசியலமைப்பு இல்லை.1956ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் மக்கள் தங்களது உரிமை தொடர்பான பிரகடனத்தினை தமது ஜனநாயக தீர்வின் ஊடாக மிகவும் தெளிவாக வெளிப்படுத்திவந்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் குடியியல்,அரசியல் பிரகடனத்தின் அடிப்படையில் ஒரு மக்கள் குழாமுக்கு சுயநிர்ணய உரிமையுண்டு.ஐ.நாவின் பொருளாதார கலாசார,சமூக உரிமைகள் ஒப்பந்ததின் அடிப்படையில் ஒரு மக்கள் குழாமுக்கு சுயநிர்ணய உரிமையுண்டு.இந்த ஒப்பந்தங்களை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருக்கின்றது.அதுநிறைவேற்றப்படவேண்டும்.இந்த நாட்டில் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை மறுக்கப்படுகின்றது.பிராஸில் இருந்து கியுபேக் மக்கள் பிரிந்துசென்று வாழ்வதற்காக நீதிமன்றம் சென்போது அவர்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை வழங்கப்பட்டுள்ளதன் காரணமாக பிரிந்துசெல்வதற்கான உரிமையில்லையென்ற முடிவினை எடுத்தது.
ஆனால் எங்களது நிலைமைவேறு.எங்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமையில்லை.எங்களை நாங்கள்ஆளமுடியாது.அதிகாரம் என்பது நன்மைக்காகவும் தீமைக்காகவும் பயன்படுத்தமுடியும்.தமிழ் மக்களை பொறுத்தவரையில் தற்போதுள்ள அதிகார முறைமை தமிழ் மக்களுக்கு தீமையான முறையிலேயே பயன்படுத்தப்படுகின்றது.நன்மைக்காக பயன்படுத்தும் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை.
கோத்தபாய ராஜபக்ஸ அவர்கள் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டபோது இந்திய பிரதமர் ஒரு செய்தியை அவருக்கு அனுப்பியிருந்தார்.தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் சென்ற செய்தி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.தமிழர்களின் பிரச்சினை நீதியின் அடிப்படையில் சமுத்துவத்தின் அடிப்படையில் தீர்க்கப்படவேண்டும் என்ற செய்தி வழங்கப்பட்டுள்ளது.கோத்தபாய ராஜபக்ஸ,மகிந்த ராஜபக்ஸ போன்றவர்களுக்கு இந்த செய்தி தெளிவாக கூறப்பட்டிருக்கின்றது.இதுதான் நிலைமை.சர்வதேச சமூகத்திற்கு பல வாக்குறுதிகளை வழங்கினார்கள்.
தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்காக இலங்கை அரசாங்கம் சர்வதேச உதவியை பெறுவதற்காக பல வாக்குறுதிகளை வழங்கியது.அந்த வாக்குறுதிகளை வழங்கியபோது என்னவிதமான அரசியல் தீர்வு வழங்கப்படும் என்பது பற்றி பகிரங்கமாக கூறியிருந்தார்கள்.அந்த நாடுகளுக்கு சொல்லியிருந்தார்கள்.அதுநிறைவேற்றப்படவேண்டும்.இந்தியாவிடம் 13வது திருத்த சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டு அதன் மூலம் கட்டியெழுப்படுகின்ற கூடுதலான அதிகார பகிர்வுமூலமாகவும் ஒரு ஆக்கபூர்வமான நடைமுறைபடுத்தக்கூடிய ஒரு அரசியல் தீர்வினை ஏற்படுத்துவோம் என்று இந்தியாவிடம் கூறியிருந்தார்கள்.அது நிறைவேற்றப்படவில்லை.
விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்காக இந்தியா உதவினார்கள்.இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டன.இந்திய குழுவொன்றும் இலங்கை குழுவொன்றும்.மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டன.இந்தியாவின் சார்பில் நாராயணன்,சிவசங்கர்மேனன்,இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர்.அதேபோன்று இலங்கையின் சார்பில் லலித்வீரதுங்க,கோத்தபாயராஜபக்ஸ,பசில்ராஜபக்ஸ ஆகியொர் நியமிக்கப்பட்டனர்.
இந்த இரண்டு குழுக்களும் யுத்ததினை எவ்வாறு முன்னெடுப்பது என்று பேசி தீர்மானங்களை எடுத்து அந்த தீர்மானத்தின் அடிப்படையிலேயே விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டனர்.விடுதலைப்புலிகளின் போராட்டம் நடைபெற்று முடிந்தபோதிலும் இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை வழங்குவதற்கு தயங்குகின்றது.பின்நிற்கின்றது.இதற்கு இந்தியா என்ன செய்யப்போகின்றது.இதனை இந்தியாவிடம்கேட்கவேண்டிய அவசியம் உண்டு.இதனை நிறைவேற்றவைக்கவேண்டிய அவசியம் உண்டு.
நரேந்திரமோடிக்கு முன்பிருந்த பிரதமரான மன்மோகன் சிங்,இலங்கையில் தமிழர்கள் இரண்டாம்தர பிரஜைகளாக நடாத்தப்படுகின்றார்கள்,அவை ஏற:றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல.இலங்கைக்கு சம அந்தஸ்துகொடுக்கவேண்டும்.இது இலங்கை மக்களுக்குரிய பிரச்சினை மட்டுமல்ல இந்திய இலங்கை உறவினை பாதிக்கின்ற பிரச்சினை.இது தீர்க்கப்படவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
சர்வதேச சமூகத்திற்கு கடமையிருக்கின்றது.சர்வதேச சமூகம் அக்கரையாகவுள்ளனர்.சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் அடிப்படையிலும் இலங்கையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச ஒப்பந்ததின் அடிப்படையிலும் இந்த நாட்டில் பிரச்சினையை தீர்ப்பதற்கு சர்வதேசத்தின் பங்களிப்புக்கு இடமுண்டு.அதனை நடைமுறைப்படுத்தவேண்டும்.