(பி.நவநீதன்)
ஆளும் கட்சியின் பிரதிநிதிகள் எனத் தம்மைத் தாமே கூறிக் கொள்பவர்கள் கடந்த காலத்தில் அரச தரப்பினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை, படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலும் பதில் கூற வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் பிரச்சாரங்கள் இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டமொன்று நேற்றைய தினம் (24) ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இலங்கையில் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலோடு ஒரு சர்வாதிகாரமான ஆட்சியை தமிழ் மக்களின் ஒருமித்த பலத்தோடு தூக்கியேறிந்தோம். அதன் ஊடாக 130 கைதிகள் வரை விடுதலை செய்யப்படக் கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தோம், தமிழர் பிரதேசங்களில் இராணுவத்தின் பிடியிலிருந்த 29ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளோம். மனித உரிமைப் பேரவையில் 47 நாடுகளோடு இணைந்து யுத்தத்தின் போது மறைக்கப்பட்ட உண்மைகள் கண்டறியப்பட வேண்டும், மறுக்கப்பட்ட நீதி வெளிவர வேண்டும் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தினை சர்வதேச ரீதியாக நிறைவேற்றுவதில் வெற்றி கண்டிருக்கின்றோம்.
காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்கான ஓர் அலுவலகம் ஒன்றினை இலங்கையில் நிறுவியிருக்கின்றோம், அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்காக பாராளுமன்றத்தினை அரசியல் சாசன சபையாக அமைத்து அதன் மூலமாக புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியில் கனிசமான முன்னேற்றத்தினைக் கண்டு இறுதியில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையோடு அது நிறைவேற்றப்பட இருந்த நிலையில் 2018இல் ஒக்டோபர் சதிப்புரட்சியின் ஊடாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டு அது தடைப்படுத்தப்பட்டது.
தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கவிருந்த இத்தகைய அரசியலமைப்பினைக் குழப்பியடித்த பேரினவாதிகளோடு கட்சிதாவி இணைந்து கொண்டவர்கள் தான், தற்போது அரச தரப்பினரோடு இணைந்து தாம் ஆளும் கட்சியின் பிரதிநிதிகள் எனக்கூறி தமிழ் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யப் போவதாக கூறிவருகிறார்கள்.
இவ்வாறு தம்மை ஆளும் கட்சியின் பிரதிநிதிகள் என கூறிக் கொள்பவர்கள் கடந்த காலத்தில் அரச தரப்பினரால் கடத்தப்பட்டு காணமல் ஆக்கப்பட்டவர்கள்; கப்பங்கோரி வதைக்கப்பட்டவர்கள், படுகொலை செய்யப்பட்ட ஊடகவிலாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்திஜீவிகள் தொடர்பிலும் பதில் கூற வேண்டும் எனவும் தெரிவித்தார்.