எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரப்பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடாத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் பிரசாரபணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தேர்தல் பிரசாரபணிகளை ஆரம்பித்துள்ளது.
இதன் கீழ் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை மற்றும் மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசன் ஆகியவற்றுக்கு இன்று காலை விஜயம் செய்த இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளருமான கி.துரைராஜசிங்கம் அவர்களிடம் ஆசிகளைப்பெற்றுக்கொண்டார்.
இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகள் குறித்தும் மதத்தலைவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் சிவம்பாக்கியாதன் உட்பட ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கி.துரைராஜசிங்கம் கருத்து தெரிவித்தார்,
எதிர்வரும் ஆகஸ்ட் 05ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.கொரனா தொடர்பான பிரச்சினை இன்னும் முடிவுக்குவரவில்லை.மாதிரி தேர்தல் ஒன்றை தேர்தல் ஆணையகம் நடத்தி அது தோல்வியில் முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.இந்தநிலையில் வேட்பாளர்களுக்கு இலக்கங்கள் வழங்கப்பட்டு அவர்கள் மும்முரமாக செயற்பட்டுவருகின்றனர்.
தேர்தலுக்கு மக்களை தயார்படுத்துதல் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. சரியானதொரு தெளிவு இல்லாத சூழ்நிலையில் தான் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கின்றது.
முற்றுமுழுதாக ஒரு புதிய அனுபவத்தை இலங்கையிலே வாக்காளர்களும் வேட்பாளர்களும் சந்திக்கவிருக்கின்றோம். மட்டக்களப்பிலே தற்போதிருக்கின்ற தேர்தல் களமானது முன்பிருந்த நிலைமைகளைவிட வித்தியாசமானதாகவே இருக்கின்றது.
தற்போதிருக்கின்ற அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி அவர்கள் தனது பதவியேற்பு நிகழ்விலே தான் சிங்கள பௌத்த மக்களால் தெரிவு செய்யப்பட்டதாகவும் அந்தவகையில் அவர்களுடைய அபிலாஷைகளை திருப்திப்படுத்துகின்ற வகையிலே தனது செயற்பாடுகள் அமையும் என்றும் ஏனைய மக்களையும் சமமாக மதிப்போமென்று ஒப்பிற்கு ஒரு வாசகத்தையும் கூறியிருந்தார். ஆனால் தொடர்ந்து வருகின்ற ஒவ்வொரு செயற்பாடுகளும் அதற்கு முரணாகவே இருக்கின்றன.
இந்தத் தேர்தல் தொடர்பாக 19ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலே தேர்தலுக்காக மூன்று மாதகாலங்கள் தான் பாராளுமன்றம் ஓய்வெடுக்கலாம் என்ற விடயம்கூட உயர் நீதிமன்றத்திலே இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலே தொடர்ந்து அவ்வழக்கை விசாரணை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கூறியிருக்கின்றது. மூன்று மதங்களுக்கு மேலும் பாராளுமன்றம் மூடியிருக்கலாமா என்பது தொடர்பிலே உயர் நீதிமன்றம் இன்னும் தீர்ப்பினை வழங்கவில்லை. ஆகவே அது ஈன்னும் வெற்றிடமாகவே இருக்கின்றது. ஆறு மாதங்களுக்கு பாராளுமன்றம் இல்லாத ஒரு நாடாக இலங்கை இருக்கப்போகின்றது. ஜனாதிபதி அவர்களும் அமைச்சரவையும் சில தீர்மானங்களை எடுக்கப்போகின்றனர்.
தொல்பொருள் திணைக்களம் தொடர்பாக ஜனாதிபதியுடைய செயலணியொன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது. அந்த செயலணியிலே தொல்லியல் சார்ந்தவர்கள் மிகவும் குறைவாக இருக்கின்றனர். பௌத்த பிக்குகளும் இராணுவ அதிகாரிகளும் இருக்கின்றனர். இராணுவ தலைமை அதிகாரிதான் பாதுகாப்புச் செயலாளர்தான் இதனுடைய தலைவராகவும் இருக்கின்றார். எப்பொழுதும் இந்த தொல்லியல் திணைக்களம் தொடர்பிலே சிறுபான்மை மக்களுக்கு அதிருப்தி இருக்கின்றது. இந்த அதிருப்தியை மேலும் அதிகரிக்கும் விதமாகவே இந்த ஜனாதிபதி செயலணி இருக்கின்றது.
இந்த செயலணி இலங்கை முழுவதிலும் செயற்படுவதாக இல்லை. கிழக்கு மாகாணத்தில் மட்டுமே செயற்படுகின்றது. இலய்கையிலுள்ள மற்றைய தொல்லியல் நடவடிக்கைகள் எல்லாம் அப்படியே மௌனமாகப்போகின்றதா? அல்லது அது தொடர்பாக ஆய்வு தேவையில்லையா? ஏன் அவசரமாக கிழக்கு மாகாணத்திற்கு மட்டும் அமைக்கப்பட்டு இயங்க வேண்டும் என்பது நியாயமான கேள்வியாகும். ஆகவே இந்த செயலணியை முற்றுமுழுதாக நாங்கள் நிராகரிக்கின்றோம். எங்களுடைய கட்சியைப் பொறுத்தவரை இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விடயம் தொடர்பாக விவாதிப்பதற்கு பாராளுமன்றம்கூட இல்லை. பாராளுமன்றம் இருந்திருந்தால் எங்களுடைய குரலை நாங்கள் அங்கு பதிவு செய்திருப்போம். இந்த விடயத்தை மீளாய்வு செய்யும்படி ஜனாதிபதியை கேட்டிருப்போம்.
இந்த செயலணியுடைய செயற்பாடுகளை ஜனாதிபதி அவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். பாராளுமன்றம் கூட்டப்பட்ட பின்பு விவாதத்தின் பின்னர் இதனை செய்ய வேண்டும். இந்த விடயங்களெல்லாம் தற்போது தமிழ் மக்களுடைய பேசுபொருளாகவும் இந்த தேர்தல் தொடர்பிலே கவனமெடுக்கக்கூடிய விடயமாகவும் இருக்கின்றது. ஆகவே தமிழ் மக்கள் மிகவும் விழிப்படைந்து சிங்கள பௌத்தமயமாக ஆக்கவிருக்கின்ற ஜனாதிபதியினுடைய அல்லது அரசாங்கத்தினுடைய செயற்பாடுகளுக்கு எதிராக உணர்வோடு எழவேண்டும்.
அந்த வகையிலே மட்டக்களப்பிலே அரசசார்பிலே போட்டியிடுகின்ற மொட்டு,படகு சூரியன்கூட அந்த வகையில்தான் இருக்கின்றது. சூரியன் என்பது எங்களுடையது. அது தேர்தல் காலங்களில் வாடகைக்கு விடப்படுகின்றது. அவ்வாறுதான் இப்போதும் வாடகைக்கு விடப்பட்டிருக்கின்றது. முற்றுமுழுதாக அரசாங்கத்தை சார்ந்திருந்தவர்கள் தான் இப்போது சூரியனை வாடகைக்கு எடுத்துக்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலே களத்தில் இறங்கியிருக்கின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர ஒட்டுமொத்தமாக இவர்கள் அனைவரும் அரசு சார்பானவர்களாகவே இருக்கின்றனர். அரசு தொடர்ச்சியாக இந்த நாட்டை சிங்கள பௌத்தமயமாக்க நினைக்கின்றது.
ஆகவே தமிழ் மக்கள் எல்லோரும் ஒன்றுதிரண்டு மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையிலே தமிழ் மக்களுக்கு உரித்தான நான்கு ஆசனங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கும் வண்ணம் அவர்கள் செயற்படுகின்றனர் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய அனைத்து பிரதேசசபை உறுப்பினர்கள், எங்கள் கிளைகளினுடைய அனைத்து உறுப்பினர்கள் வாலிப முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் மக்கள் மத்தியில் சென்று அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவிருக்கின்றோம்.
ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற வாக்களிப்பிலே வேறுவிதமான செயற்பாடுகள் எதுவும் இல்லாதிருக்குமானால் கொரோனா அச்சம் நீக்கப்படுமானால் மக்கள் பெருமளவிலே திரண்டு சரியானதொரு தீர்ப்பை அளித்து மட்டக்களப்பு மாவட்டத்திலே நான்கு ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.