சட்டத்தை மீறிப்பழகியவர்களும், அதிகாரத் துஸ்பிரயோகிகளும் விரும்பியவாறெல்லாம் நடந்து கொள்ளலாம் என்ற நிலைக்கு தற்போது நாடு சென்றுள்ளது… (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் - கி.துரைராசசிங்கம்)




சட்டத்தை இயல்பாகவே மீறிப்பழகியவர்களும், அதிகாரத்தைப் பயன்படுத்தி துஸ்பிரயோகம் செய்தவர்களும் தாங்கள் விரும்பியவாறெல்லாம் நடந்து கொள்ளலாம் என்ற நிலைமையே தற்போது நாட்டில் உள்ளது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

தேர்தல் காலத்தில் நடைபெறுகின்ற தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தெரிவிப்பதற்கு கண்காணிப்புக் குழுக்கள் இருப்பது அவசியம். தற்போது நாட்டில் தேர்தல் பிரகடணப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

ஆனால் இதுவரை தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படவும் இல்லை, மாவட்டங்களுக்கு அனுப்பப்படவுமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் நிலைமைகளில் அரசாங்க தரப்பினரினால் மேற்கொள்ளப்படுகின்ற தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பிலும், கொரோனா சட்டங்கள் பிரயோகிக்கப்படுகின்ற முறைமை தொடர்பிலும் இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் தற்போது சட்டங்கள் கடைப்பிடிக்கப்படுவது தொடர்பிலே மிகப் பெரிய தெளிவின்மை ஏற்பட்டிருக்கின்றது. 

ஆலயங்கள், மசூதிகள், விகாரைகள், தேவாலயங்கள் என்பவற்றிலே சுகாதார ஒழுங்கு விதிகள் பேணப்பட வேண்டும் என்பதற்காக கடுமயான கண்காணிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மிகக் குறைந்தளவினர் அதுவும் பூசைகளோடு தொடர்புள்ளவர்கள் மாத்திரம் வணக்கத்தளங்களில் அனுமதிக்கப்படுகின்றார்கள். 

இதேவேளை கொழும்பு செட்டித் தெருவிலே இரகசியமாகத் தொழுகையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அனைவரும் காவற்துறையினரின் வாகனத்தில் மிக நெருக்கமாக ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டதைக் காணொளிகளில் கண்டோம்.

முள்ளிவாய்க்கால் தினத்தை தமிழ் மக்கள் அனுஸ்டித்த பொழுது சுகாதார நடைமுறைகள் மீறப்படும் என்பது தொடர்பாக நீதிமன்றக் கட்டளைகள் பெறப்பட்டன. 

நான்கு ஐந்து பேர் ஈகைச் சுடரேற்றிய போது அவர்கள் தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டார்கள். இதேவேளை மே 19ல் நடைபெற்ற அரசின் போர் வெற்றி விழாவில் முப்படைகளின் தளபதியும், நாட்டின் தலைவருமான ஜனாதிபதி அவர்கள், படைத்தளபதிகள், இன்னும் சில மேல் நிலை உத்தியோகத்தர்கள் முகக் கவசமின்றியே அந்த நிகழ்வுகளில் ஈடுபட்டார்கள்.

அத்துடன், அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் பூதவுடல் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்ட போது பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூக இடைவெளியைப் பராமரிக்கவில்லை என்பது காணொளிக் காட்சிகள் மூலம் தெரிய வருகின்றது.

 ஆனால், அவரது பூதவுடல் கொட்டகலையில் வைக்கப்பட்டிருந்த போது மக்கள் சுகாதார இடைவெளியை பராமரிக்கவில்லை என்பதற்காக ஊரடங்குச் சட்டத்தை அழுல்ப்படுத்தி அஞ்சலி செய்ய வந்த மக்கள் தடுக்கப்பட்டிருக்கின்றார்கள். இவை கொரோனா தொற்று தொடர்பான சுகாதார விதிகள் யார் யாரால் எவ்வெவ்வாறு கடைப்பிடிக்கப்படுகின்றது என்பதனை வெளிப்படுத்துகின்றன.

அதேவேளை தற்போது நாட்டில் தேர்தல் பிரகடணப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் இதுவரை தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படவும் இல்லை, மாவட்டங்களுக்கு அனுப்பப்படவுமில்லை. 

ஆனால் அரசாங்கக் கட்சியினர் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை தொடக்கி வைப்பதும், திறந்து வைப்பதுமான நிகழ்வுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 

பல இடங்களில் தேர்தல் பிரசாரங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக நீண்ட நாட்களாக இயங்காதிருந்த வாழ்ச்சேனைக் காகித ஆலையில் அட்டைத்தாள் உற்பத்திக்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நேற்றைய செய்திகள் வெளிப்படுத்துகின்றன.

 2010 தொடக்கம் 2015 வரை மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக இருந்தார். அவருடைய கட்சி ஆட்சியில் இருந்தது. காகித ஆலை பற்றி எந்தவிதக் கதையும் இருக்கவில்லை. இப்போது திடுதிப்பென காகித அட்டை உற்பத்தி தொடர்பான செய்திகள் வெளிவருகின்றன. தேர்தல் காலத்தில் இவ்வாறு செய்யப்படலாமா? என்பது ஒரு கேள்வி. இது தேர்தல் தொடர்பான ஏமாற்று வேலையா? என்பதும் இன்னுமொரு கேள்வி. அது மட்டுமல்லாது கொரேனா சூழ்நிலையில் அணியப்படுகின்ற முகக் கவசங்களில் கூட கட்சியின் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளமையும் சமூக வளைதளங்களில் வந்துள்ளன.

தேர்தல் காலத்தில் நடைபெறுகின்ற இது போன்ற தேர்தல் சட்ட மீறல்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குத் தெரிவிக்கப்படாலம். அவ்வாறு தெரிவிப்பதற்கு கண்காணிப்புக் குழுக்கள் இருப்பது அவசியம். பொது மக்கள் கண்காணிப்புக் குழுவுக்குத் தெரிவிக்க கண்காணிப்புக் குழவினர் களத்துக்குச் சென்று நிலைமையை அவதானித்த பின் தேர்தல் ஆணைக்குழுவுக்குத் தெரிவிக்க முடியும். ஆனால் இத்தகைய நடைமுறைகளுக்கு இந்த நாட்டில் தற்போது வழியேதும் இல்லை.

மொத்தத்தில் மேற்குறித்த எல்லா நிகழ்வுகளும் சட்டத்தைக் கடைப்பிடிக்கின்ற குடிமக்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தகின்ற அதேவேளை சட்டத்தை இயல்பாகவே மீறிப்பழகியவர்களும், அதிகாரத்தைப் பயன்படுத்தி துஸ்பிரயோகம் செய்தவர்களும் தாங்கள் விரும்பியவாறெல்லாம் நடந்து கொள்ளலாம் என்ற செய்தியையும் தருகின்றது.

இந்த நிலைமை வெளிப்படையாகவே ஜனநாயக மீறல்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகின்ற அதேவேளை எதிர்காலத்தில் ஆதிக்க சக்திகளின் விருப்பத்திற்கு ஏற்ப சட்டங்கள் செயலிழந்து விடுமோ? என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றது. இது தொடர்பில் ஜனநாயகத்தை நிலைநாட்ட விரும்புகின்ற எல்லா சக்திகளும் அக்கறை கொண்டு நாட்டை சட்ட ஆட்சிக்குள் கொண்டு வருகின்ற செயற்பாடுகள் தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியமாகும் என்று தெரிவித்தார்.