கடல் சீற்றத்தினால் மட்டக்களப்பின் பல பகுதிகளில் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்து நீடித்துவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை தொடக்கம் பெரியகல்லாறு வரையான பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்களின் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு நாவலடி பகுதியில் தொடர்ச்சியாக கடல் அலைகள் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் செல்வதனால் மக்களும் மீனவர்களும் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.

கடந்த ஓரு வாரகாலமாக தினமும் கடல் நீர் மக்கள் குடியிருப்புக்குள் புகுவதன் காரணமாக சில குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் வசித்துவருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேநேரம் கடல் நீர் உட்புகுவதன் காரணமாக மீனவர்களின் வாடிகளில் உள்ள வலைகளும் சேதமடைவதுடன் வள்ளங்களும் சேதமடைவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் தொடர்ச்சியாக கடல் சீற்றம் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.