மக்களுக்கான குடிநீர் வழங்குவதற்காக மேலதிக நீர்ப்பம்பி கையளிப்பு -போரதீவுப்பற்று

(எஸ்.நவா)

 .

கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் வரட்சி காலப்பகுதியில்
பொதுமக்களுக்கு நீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 43 கிராமசேவகர் பிரிவுகளிலும் வைரஸ் தாக்கத்தின் காரணமாக அரசினால் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற ஊரடங்குச்  சட்டத்தினை கடைப்பிடிப்பதாலும் வரட்சியின் போதான மக்களுக்கான குடிநீர் வழங்கல் சேவையை வழங்குவதற்கு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தினால் மட்டக்களப்பு அரசாங்க அதிபரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து முதற்கட்ட நிதியாக  ஒரு இலட்சம் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளது. அந்நிதியைக்கொண்டு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தற்போது வரட்சியினால்  குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்குகின்ற மக்களுக்கான குடிநீர் வழங்குவதற்கு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வருடாவருடம் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சினால் இரண்டு குடிநீர் வவுசர்கள்இ ஒரு லொறி வவுசர் மற்றும்  நீர் பம்பிகள் போன்றன போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்கு கையளிக்கப்பட்டு அவை தற்காலிகமாக போரதீவுப்பற்று பிரதேச சபை செயலாளருக்கு பாரப்படுத்தப்பட்டு பொது மக்களுக்கான குடிநீர் வழங்கல் சேவை கடந்த சில வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது . தற்போது வரட்சி மற்றும் வைரஸ் தாக்க பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்திப்பதற்கு ஏற்ற மேலதிக நீர்ப்பம்பி ஒன்றினை தற்காலிகமாக வேர்ள்ட்விஷன் லங்கா நிறுவனத்திடமிருந்து பெற்று போரதீவுப்பற்று பிரதேச செயலாளரினால் பிரதேசசபை செயலாளருக்கு தற்காலிகமாக  கையளிக்கப்பட்டுள்ளது. இதனூடாக மக்களுக்கான குடிநீர்த்தேவை பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ..