புளியங்கண்டலடி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளை மக்களின் பாவனைக்கு கையளித்தார் ஸ்ரீநேசன் MP

வாகரைப் பிரதேச செயலப்பிரிவிற்குள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை மக்களின் பாவனைக்கு வழங்கும் நிகழ்வுகள் இன்று (2020.02.16) புளியங்கண்டலடி பிரதேசத்தில் இடம்பெற்றது. 

யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வாகரைப் புளியங்கண்டலடி கிராமத்தில் உள்ள பிரதான பாதைகள்   பல சிதைவடைந்துள்ளமையாலும், மணல் வீதிகளாக உள்ளமையாலும் பொதுமக்கள் தமது அன்றாட போக்குவரத்து செயற்பாடுகளை மேற்கொள்ள பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருதாகவும், இவ்வீதிகளைப் புனரமைத்துத் தருமாறும் பிரதேச மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். 

இந்நிலையில் கடந்த ஆட்சிக் காலத்தில் ஊரக எழுச்சித் திட்டம் மற்றும் பன்முகபடுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டங்களின் ஊடாக இருபது இலட்சம் ரூபாய் பெறுமதியில் மேற்கொள்ளப்பட்ட புளியங்கண்டலடி விவேகானந்தா வீதி மற்றும் விநாயகர் வீதி ஆகியவை கொங்றீட் வீதியாக அபிவிருத்தி செய்யப்பட்டு இன்று பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் துரைசிங்கம் மதன், தமிழரசுக் கட்சியின் வாகரைப் பிரதேச வாலிபர் முன்னனியின் பிரதேச இணைப்பாளர் அலெக்ஸ் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பிரமுகர்கள், இளைஞர் கழகங்களின் உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் ஏழு இலட்சம் ரூபாய் பெறுமதியில் புனரமைப்பு செய்யப்பட்ட சால்ஸ் விளையாட்டு மைதானம், நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியில் புனரமைக்கப்பட்ட வாகரை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தினையும் பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.