Breaking News

மாந்தீவில் கொரோனா சிகிச்சை பிரிவா? – கிளம்பும் எதிர்ப்புகள்

கொரோனா வைரசினால் பாதிக்கப்படுவோருக்கு சிசிச்சையளிக்கும் நிலையமாக மட்டக்களப்பு மாந்தீவினை மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதை அனுமதிக்க முடியாது.இதில் அரசாங்கம் ஒரு சிறந்த முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கின்றோம்.இது மட்டக்களப்புக்கு தேவையற்ற விடயமாகும் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவரும்,சமூக சேவையாளருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை(27)மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:-...

உலகத்தில் குறிப்பாக கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து கொரோனா நோய் பரவிக்கொண்டிருக்கின்றது.இந்த வைரசு மிகவும் மோசமான வைரசாக காணப்படுகின்றது.இதுவரையும் 2000 க்கு மேற்பட்டவர்கள் இறந்துள்ளார்கள்.இந்த வைரசு தொடர்பில் இதுவரையும் இலங்கையில் உயிரிழக்கவில்லை.இலங்கையில் இத்தாக்கம் குறைவாக இருந்தாலும் பல உலகநாடுகளில் அதிகரித்துள்ளது.வெளிநாட்டிலிருந்து வருபவர்கள்  இந்நோய்த் தொற்றுக்குள்ளாகியவர்கள் என எம்நாட்டில் இனம்காணப்பட்டால் அவர்களை அனுமதிப்பதற்கு இடம் தேவைப்படுவதனால் அரச வைத்திய அதிகாரி சங்கத்தால் மட்டக்களப்பு மாந்தீவு எனும் பகுதியை இனங்கண்டுள்ளார்கள்.

இதுதொடர்பான செய்தி பல ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது.இம்மாந்தீவானது 1920 ஆம் ஆண்டளவில் சுமார் 500 மேற்பட்ட நோயாளிகளை சிசிச்சைக்காக அனுமதித்த இடமாகும்.தற்போது இவ்வைத்தியசாலையில் மூன்று தொழுநோயாளர்கள் அங்கு இருப்பதாக அறியக்கிடைத்துள்ளது.

தற்போது மட்டக்களப்பு மாந்தீவு தொழுநோயாளர் வைத்தியசாலையை மீள் புனரமைத்து செய்து கொரோனா தொற்றுக்குள்ளாகியவர்களுக்கு சிசிச்சை அளிப்பதற்காக அரச வைத்தியசங்கம் அனுமதி கோரியிருப்பதாகவும் அறிய முடிகின்றது.

இம்மாந்தீவானது 98 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்படுகின்றது.இக்காணியில் சுமார் 10 ஏக்கர் நிலப்பில் தொழுநோய் வைத்தியசாலை அமையப்பெற்றுள்ளது.மேலும் இத்தீவில் 40 ஏக்கர் காணியில் விவசாய நிலங்களும்,40 ஏக்கர் காணியில் காடு வனாந்தர நிலங்களாகவும் காணப்படுகின்றது.தற்போது அத்தீவை அண்டிய பகுதிகளில் சனத்தொகை அதிகரிப்பதை காணக்கூடியதாகவுள்ளது.இம்மாந்தீவானது சுற்றுலாத்துறைக்கு ஏதுவான இடமாகவும் இருக்கின்றது.

இலங்கையில் முக்கியமான தீவுகள் இன்று சுற்றுலா வலயங்களாகவும் காணப்படுகின்றது.குறிப்பாக இம்மாந்தீவில் 100 மேற்பட்ட கட்டிடங்கள் காணப்படுகின்றது.இத்தீவிற்கு சுற்றுலாப்பயணிகளை கவரும் வண்ணமாக வெளிநாட்டுப்பறவைகளும் வந்து செல்கின்றது.இத்தீவு சுற்றுலாத்துறைக்கு கேந்திர  முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும்.குறித்த கொரோனா வைரசானது எவ்வகையில் நோய்த்தொற்றுக்குள்ளாகின்றது என்பது குறித்து இன்னமும் கண்டறியப்படவில்லை.

வெளவால் பறவையினங்களினாலும் மனிதர்களுக்கு பரவக்கூடியதாக நாம்  அறிந்திருக்கின்றோம்.இதேநேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலையில் அனுமதிப்பதன் ஊடாக அங்குள்ள பறவை இனங்களிலிருந்து மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் தொற்றக்கூடிய வாய்ப்புள்ளது.ஏன் இப்படியான தொற்றுநோய் பரவும் நோயாளிகளை இங்கு அனுமதிப்பதற்கு இங்குள்ளவர்கள் முயற்ச்சிக்கின்றார்கள் என்பது தெரியாமல் உள்ளது.

இந்த அரச வைத்தியர் அமைப்பானது கடந்த கால ஜனாதிபதி தேர்தலில் தற்போதுள்ள ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கிய அமைப்பாகும். அக்காரணத்தினாலோ தெரியவில்லை.அரசாங்கத்தினை பிரதிநிதிப்படுத்தும் எந்தவொரு அரசியல்வாதியும் குறிப்பாக மட்டக்களப்பினை சேர்ந்த அரசியல்வாதிகள் கவனம் செலுத்தியதாக தெரியவில்லை.இதனை தடுத்து நிறுத்துவதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர்கள் ஒன்று சேரவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இவ்வளத்தினை எம்மால் விட்டுக்கொடுக்க முடியாது.இதற்கு அனைவரும் ஒன்று திரளவேண்டும்.மட்டக்களப்பு மாவட்ட நிபுணர்கள் அமைப்பு இதனை தடுத்து நிறுத்துவதற்கு சுகாதார அமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.அந்தவகையில் இவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களையும் நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.

புத்தளம் மாவட்டத்தில் உள்ள கற்பிட்டி எனும் தீவில் 14க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன.இச்செயற்பாட்டை அங்கு செயற்படுத்த முடியுமா என பரிசீலித்து செயற்படுத்தலாம்.மட்டக்களப்பில் உள்ள நாம் எமது இளைஞர்கள்,மக்கள் இச்செயற்பாட்டை அனுமதிக்க முடியாது.இதில் அரசாங்கம் ஒரு சிறந்த முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கின்றோம்.இது மட்டக்களப்புக்கு தேவையற்ற விடயமாகும்.சனத்தொகை குறைவான மாவட்டங்கள் எத்தனையோ இருக்கின்றன.அங்கு இச்செயற்பாட்டை முறையாக நடைமுறைப்படுத்தலாம்.இது எமது மாவட்டத்திற்கு தேவையற்ற விடயமாகும்.அரச வைத்தியசங்கம் நீங்கள் அனுப்பிய திட்டவரைபுகளை உடனடியாக மீளப்பெறவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

No comments