மட்டக்களப்பு மாவட்டத்தில் 40ஆயிரம் பேருக்கு வீடுகள் தேவை –வியாழேந்திரன் எம்.பி.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 40ஆயிரம் வீடுகளின் தேவையுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
வடகிழக்கு மாகாணத்திற்கு 65ஆயிரம் வீடுகள் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாவதும், வடகிழக்கின் சரித்திரத்தில் கிடைத்த மிகப்பெரும் வரப்பிரசாதம் எனவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டமாக முன்னெக்கப்படும் கிராமத்திற்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் கிராம மட்டத்தில் காணப்படும் வீடில்லை பிரச்சினையை தீர்க்கும் வகையில் கிராமத்திற்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன்கீழ் மட்டக்களப்பு,வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாண்டியடியில் மிகவும் வறிய நிலையில் உள்ள குடு;ம்பத்திற்கான வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது.

தகரக்கொட்டகையில் மிகவும் கஸ்டமான நிலையில் மூன்று பெண் பிள்ளைகளுடன் வாழும் குடும்பத்திற்கு இந்த வீடு அமைத்துக்கொடுக்கப்படவுள்ளது.

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மூலம் சுமார் 06இலட்சம் ரூபா செலவில் வீடு அரசின் முழுமையான பங்களிப்புடன் அமைக்கப்படவுள்ளது.

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அடிக்கல் நட்டார்.
இந்த நிகழ்வில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள்,வவுணதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
அடிப்படை தேவைகளைகூட பூர்த்திசெய்யமுடியாத ஒரு சமூகமாக தமிழ் சமூகம் இன்று உள்ளது.இலங்கையில் உள்ள சமூகங்களில் அதிகளவு அடிப்படை தேவைகளையுடைய சமூகமாக தமிழ் சமூகம் உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 40ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு வீடுகள் இல்லை.அதேயெண்ணிக்கையானோருக்கு மலசலகூடமில்லை.பலருக்கு இருப்பதற்கான காணியில்லை.30ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள் இருக்கின்றன,எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.பல்வேறு தேவைகளை சுமந்து நிற்கும் சமூகமாக எமது சமூகம் உள்ளது.

நூங்கள் எமது மக்களுக்கான தீர்வு,உரிமை என்பது பற்று பேசுகின்ற அதேவேளை அதற்கு சமாந்தரமாக அபிவிருத்திசார்ந்த பணிகளையும் நாங்கள் முன்னெடுத்தேயாகவேண்டும்.அவ்வாறு முன்னெடுக்காவிட்டால் இனிவரும் காலத்தில் எமது சமூகத்தின் நிலைமை தற்போதுள்ள நிலைமையினை விட மிக மோசமான நிலைக்கு கொண்டுசெல்லும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 25000பேர் மத்திய கிழக்கு நாடுகளை நம்பிவாழும் நிலையில் உள்ளனர்.அதில் எட்டாயிரம் பணிப்பெண்கள் உள்ளனர்.மத்திய கிழக்கு நாடுகளும் இல்லையென்றால் அவர்களின் நிலைமையென்ன?இந்த நிலைமையில் எமது ஓரு பகுதியினர் மக்களுக்கான தீர்வு,உரிமை என பயணிக்கும்போது அதற்கு இணைவாக இன்னுமொர பிரிவு அபிவிருத்தியென்ற விடயத்தில் நிச்சயமாக பயணித்தாகவேண்டும்.