மாந்தீவினை வழங்குதில்லையென வியாழேந்திரன் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்

மட்டக்களப்பு மாந்தீவினை கொரோனாவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் பகுதியாக மாற்றுவதற்கு அனுமதி வழங்குவதில்லையென்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு,மாந்தீவு பகுதியை தெரிவு செய்ய இலங்கை வைத்திய சங்கம் முன்மொழிந்துள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில் அது குறித்து ஆராயும் வகையிலான அவசர கூட்டம் ஒன்று இன்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர்,மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்,மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்க பிரதிநிதிகள்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்,மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி,காணி திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டில் கோரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களை எவ்வாறு பராமரிப்பது, அவர்களை எங்கு தங்கவைப்பது போன்ற விடயங்கள் ஆராயப்பட்டதோடு. மாந்தீவில் கோரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களை அனுமதிப்பதில்லை என்றும். அதற்கு பதிலாக மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையிலேயே விசேட பிரிவை உருவாக்கி அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முட்டக்களப்பு மாவட்டம் அல்லது மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக்கான சிகிச்சையளிக்கும் நிலையமாக மாற்றலாம் என்ற ஒரு எதிர்வுகூறலே செய்யப்பட்டதாகவும் அந்த இடத்தினை தெரிவுசெய்யுமாறு கோரவில்லையெனவும் இங்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர்களினால் தெரிவிக்கப்பட்டது.

எனினும் அவ்வாறான இடத்தினை தெரிவுசெய்வதனால் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள் இங்கு சுட்டிக்காட்டப்பட்டதுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் திறக்கப்பட்டுள்ள விசேட கொரோனா சிகிச்சை பிரிவினை மேலும் விரிவுபடுத்தி வசதிகளை ஏற்படுத்ததேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.