சுவிஸ் உதயம் அமைப்பினால் வறுமை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு உதவி

சுவிஸ்; உதயம் அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கான உதவி திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுவிஸ்கிராமம் பகுதியில் வறிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் மற்றும் உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.

சுவிஸ்; உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பிரதிச்செயலாளர் சங்கரப்பிள்ளை சுபாஷ்கோவின் தாயாரின் முதலாவது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

சுவிஸ்; உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண பிரதிச்செயலாளரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான திருமதி செல்வி மனோகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுவிஸ்; உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பிரதிச்செயலாளர் சங்கரப்பிள்ளை சுபாஷ்கோ பிரதம அதிதியாக கலந்துகொண்டு இவற்றினை வழங்கிவைத்தார்.

கூலித்தொழில் மற்றும் மீன்பிடியில் ஈடுபடும் மக்கள் அதிகளவில் உள்ள இப்பகுதியில் அண்மைக்காலமாக ஏற்பட்ட காலநிலை மாற்றங்களினால் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டனர்.

இவர்களின் நன்மை கருதி இதன்போது சுமார் நூறு குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் இரண்டு குடும்பங்களுக்கு மீன்பிடி உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட மகளிர் ஒன்றியம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த உதவிகளை சுவிஸ் உதயம் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.