தமிழ் மொழி அறிவுள்ளவர்கள் பாதுகாப்பு,பொலிஸ் துறைக்கு அதிகளவில் தேவை - சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன குணரெட்ன

இலங்கையில் பொலிஸ் திணைக்களம் உட்பட பாதுகாப்பு பிரிவுகளில் தமிழ் மொழி அறிவுள்ளவர்களின் தேவை அதிகரித்த நிலையில் உள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் கடேற் பிரிவிற்கான உதவி பணிப்பாளரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சந்தன குணரெட்ன தெரிவித்தார்.

சிறந்த நல்லொழுக்கமிக்க சமூகத்தினை கட்டியெழுப்பி நாட்டில் சிறந்த தலைமைத்துவத்தினையும் சிறந்த நற்பிரஜைகளையும் உருவாக்கும் வகையில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் பாடசாலை ரீதியாக கடேற் பிரிவினை உருவாக்கும் செயற்றிட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இப்பிரிவினை ஆரம்பிக்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 10 பாடசாலைகளில் மாணவர் கடேற் பிரிவினை ஆரம்பிக்கும் வகையிலான நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் கடேற் பிரிவிற்கான உதவி பணிப்பாளரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சந்தன குணரெட்ன தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலய பிரதி கல்வி பணிப்பாளர் திருமதி திருமதி எஸ்.ரவிராஜ் சிறப்ப அதிதியாக கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அதிபர் ஆர்.பாஸ்கர்,புனித மைக்கேல் கல்லூரி அதிபர் பயஸ் ஆனந்தராஜா உட்பட அதிபர்கள்,ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

நாட்டினை சிறந்தமுறையில் கட்டியெழுப்பவும் எதிர்காலத்தில் நாட்டினை சிறந்த தலைமைத்துவத்தில் ஒருங்கிணைக்கவும் வீட்டின் மாவட்டத்தின் சிறந்த பிரஜையினை உருவாக்கும் வகையில் மாணவர்களுக்கான பயிற்சிகளை பொலிஸ் திணைக்களம் கடேற் பிரிவின் ஊடாக வழங்கிவருகின்றது.

அதன் கட்டமாக இந்த பிரிவில் தெரிவுசெய்யப்படும் மாணவர்களுக்கு உடல் பயிற்சிகள்,அணிநடை பயிற்சிகள்,இலங்கையின் சட்டங்கள்,முதலுதவி பயிற்சிகள்,சூழலை தூய்மைப்படுத்துவதற்கான பயிற்சிகள்,துப்பாக்கி சுடும் பயிற்சிகள் என பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இதன் கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் முதல் கட்டமாக 10 பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டு அங்கு கடேற் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனஇதன்போது கடேற் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்தஇலங்கை பொலிஸ் திணைக்களத்தின் கடேற் பிரிவிற்கான உதவி பணிப்பாளரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சந்தன குணரெட்ன,

நாங்கள் பல மதங்கள்,இனங்களைக்கொண்டிருந்தாலும் நாங்கள் அனைவரும் ஒரு நாட்டின் மக்கள்,ஒருதாயின் பிள்ளைகளாகும்.எங்களுக்குள் எந்தவேறுபாடுகளும் இல்லை.

கடந்த காலத்தில் வடகிழக்கு மாகாணம் கல்வியில் கொடிகட்டிப்பறந்தது.நாங்கள் கொழும்பில் கற்ற காலத்தில் கல்வி ரீதியாக பெரும்போட்டியிருந்தது.இன்று அந்த நிலைமாறியுள்ளது.இந்த நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்த நாட்டில் பூச்சியம் ரீதியான கடனே இருந்தது.அன்று சிங்கப்பூர் ஜனாதிபதி இலங்கைக்கு வந்துசென்றபோது நான் இலங்கைபோன்று சிங்கப்பூரை மாற்றுவேன் என்று குறிப்பிட்டிருந்தார்.ஆனால் இன்று சிங்கப்பூர் எங்கு உள்ளது நாங்கள் எங்கு இருக்கின்றோம்.சிறந்த ஒழுக்கமிக்க சமூகத்தினை சிங்கப்பூர் கட்டியெழுப்பியதன் காரணமாகவே அந்த வளர்ச்சியேற்பட்டது.

ஒழுக்கம் கட்டியெழுப்பப்படும்போது வீட்டில் சிறந்த நிலையுருவாகும்,நாட்டிலும் சிறப்பாக நிலையேற்படும்.ஒழுக்கம் இருக்கும்போது அந்த நாடு வெற்றிபெற்ற நாடாக மாறும்.அதற்கான முயற்சிகளையே இன்று நாங்கள் முன்னெடுத்துவருகின்றோம்.

இந்த கடேற் படையின் மூலம் மாணவர்கள் மத்தியில் சிறந்த தலைமைத்துவமும் ஒழுக்கமிக்க நாடும் கட்டியெழுப்பப்படும் என நான் நம்புகின்றேன்.இந்த படையணியில் மாணவர்கள் இணைந்து பணியாற்றுவதன் மூலம் எதிர்காலத்தில் தொழில் வாய்ப்பு ஒன்றினை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் ஏற்படும்.

இன்று பொலிஸ் திணைக்களத்திலும் முப்படையிலும் தமிழ் மொழி தெரிந்த அதிகாரிகளுக்கான பாரிய வெற்றிடங்கள் உள்ளன.தமிழ் இளைஞர் யுவதிகள் இந்த வெற்றிடத்தினை நிரப்புவதற்கு முன்வரவேண்டும்.தமிழ் மொழி பேசுவோரை உள்ளீர்ப்பதற்கு முப்படையினரும் பொலிஸாரும் கதவிகளை திறந்துவைத்துள்ளனர்.அதனை பயன்படுத்தவேண்டும்.அதன் மூலம் சிறந்த ஒரு நாட்டினை கட்டியெழுப்பமுடியும்.