500மில்லியன் ஏன் திருப்பியனுப்பப்பட்டது-மட்டு.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கேள்வி

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

கடந்த அபிவிருத்திக்குழுவின் கூட்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு போரதீவுப்பற்று தவிசாளர் யோ.ரஜனியினால் முன்வைக்கப்பட்ட திருத்ததுடன் கூட்டறிக்கை சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு அபிவிருத்திக்கென 822 திட்டங்களுக்கு 1040 மில்லியன் ரூபாவினை அரசாங்கம் ஐந்து செயற்றிட்டங்கள் ஊடாக வழங்கியுள்ளது தொடர்பில் ஆராயப்பட்டது.

இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் ‘சப்ரி ஹமக்’கிராம அபிவிருத்தி திட்டம்,கிராமிய உட்கட்டமைப்பு மேம்;பாட்டு திட்டம்,புதிய கொங்கிறிட் பொருத்து வீட்டு திட்டம், தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் வீட்டுதிட்டம் ஆகியவற்றிற்கான நிதிகள் ஒதுக்கீடுகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டன.

அத்துடன் கடந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக ஒதுக்கீடுசெய்யப்பட்ட 10400மில்லியன் ரூபாவில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் முடிவுறுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

அமைச்சுகள்,விசேட திட்டங்கள்,மாகாணசபை,அரசார்பற்று,சர்வதேச அரசார்பற்ற நிறுவங்களின் நிதியொதுக்கீடுகள்,ஐரோப்பிய ஒன்றிய வீட்டுத்திட்டம் என பல்வேறு திட்டங்கள் ஊடாக இந்த நிதிகள் செலவுசெய்யப்படுகின்றன.

கடந்த ஆண்டு அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 500மில்லியனுக்கும் அதிகமான நிதி மாவட்டசெயலகத்தில் இருந்து திருப்பியனுப்பப்பட்டதாக இங்கு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி கேள்வியெழுப்பினார்.

எனினும் புதிய அரசாங்கம் ஆட்சியமைத்ததை தொடர்ந்து புதிய திட்டங்கள் எதினையும் செய்யவேண்டாம் என அரசாங்கம் பணித்துள்ளதன் காரணமாகவே சில அபிவிருத்தி பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் இதன்போது கருத்து தெரிவித்தார்.

எனினும் அரசாங்கத்தினால் எந்த திட்டங்களும் இடைநிறுத்தப்படாது எனவும் தொடர்ந்து அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் இதன்போது தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் திணைக்களங்கள் ரீதியான முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்நோக்கப்படும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.