ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும்; ஶ்ரீநேசன்mp யின் கோரிக்கையை ஏற்றார் ஆளுநர்

மட்டக்களப்பு மேற்கு மற்றும் கல்குடா கல்வி வலயங்கள் எதிர்நோக்கும் ஆசிரியர் பற்றாக்குறைகளை உடனடியாக நிறைவேற்றித் தருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் உறுதியளித்துள்ளார். 

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (01.01.2020) இடம்பெற்றது. 

இந்தச் சந்திப்பின் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பல முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக பரஸ்பரம் கலந்துரையாடப்பட்டன. 

குறிப்பாக மட்டக்களப்பு மேற்கு மற்றும் கல்குடா வலயங்கள் எதிர்நோக்கும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பிலும், கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் நிலவும் வைத்தியர் மற்றும் ஆளணியரின் பற்றாக்குறை தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டன. இவை தொடர்பில் தான் உடனடியாக கவனம் எடுப்பதாகவும் ஆளுநர் உறுதியளித்தார்.

அத்துடன் அண்மைக் காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெறும் சட்ட விரோத மண் அகழ்வு தொடர்பிலும், பண்ணையாளர்கள் எதிர்நோக்கிவரும் மேய்ச்சல் தரைப் பிரச்சினைகள், யானை வேலிகளை அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன. 

முக்கியமாக கடந்த காலங்களில்  கிழக்கு மாகாண திணைக்களங்கள் மற்றும் சுகாதார சேவை நிலையங்களில் காணப்படும் சமநிலையற்ற வளப்பகிர்வுகள், பாரபட்சமான வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பட்டதாரிகளுக்கான நியமனங்களில் காணப்படும் இழுபறி நிலை தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினரால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன் இவை தொடர்பில் மத்தியரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும்  வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.