முடிவுக்கு கொண்டுவரப்பட்ட சிறைக்கைதிகளின்போராட்டம் - சிறையில் மரணமான கைதிக்கு நீதிகோரும் கைதிகள்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் இன்று காலை (05)கூரை மேல் ஏறி மேற்கொண்டுவந்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இன்று முற்பகல் வேளைகளில் சிறைச்சாலையின் கூரைக்கு மேல் ஏறிய 30க்கும்மேற்பட்ட சிறைக்கைதிகள் இந்த போராட்டத்தினை மேற்கொண்டுவந்தனர்.

சிறைச்சாலையின் கூரைகளை உடைத்துக்கொண்டு கூரைக்கு மேல் ஏறிய சிறைக்கைதிகள் இந்த போராட்டத்தினை மேற்கொண்டுவந்தனர்.

சிறைச்சாலையில் இருந்த கைதியொருவர் இன்று காலை மரணமானதை தொடர்ந்து குறித்த கைதியின் மரணம் தொடர்பில் நீதிபதி நேரடியாக வந்து விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சாய்ச்சலினால் சிறைச்சாலையில் சிகிச்சைபெற்றுவந்த கைதியொருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும் குறித்த சிறைக்கைதியின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள சிறைக்கைதிகள் நீதிபதி அவர்கள் நேரடியாக சிறைச்சாலைக்கு வந்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

குறித்த சிறைக்கதிக்கு முறையான சிகிச்சைகள் வழங்கப்படவில்லையெனவும் குறித்த கைதிக்கு முறையான சிகிச்சைகள் வழங்கப்பட்டிருந்தால் அவர் இறந்திருக்கமாட்டார் எனவும் சிறைக்கைதிகள் தெரிவித்தனர்.

சிறைச்சாலையில் தாங்கள் மிகவும் மோசமாக நடாத்தப்படுவதாகவும் தமக்கான தேவைகள் வழங்கப்படுவதில்லையெனவும் சுகவீனம் ஏற்பட்டால் முறையான சிகிச்சைகள் வழங்கப்படுவதில்லையெனவும் கைதிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிறைக்கைதிகளின் போராட்டத்தினை தொடர்ந்து சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் படையினரும் பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த சிறைக்கைதிகளின்போராட்டம் காரணமாக மட்டக்களப்பு சிறைச்சாலைப்பகுதியில் பதற்றத்துடன் கூடிய நிலைமை காணப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் மரணமான சிறைக்கைதியின் மரண விசாரணைகளை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி திருமதி ஜீவராணி கருப்பையா சிறைக்கைதி மரணம் தொடர்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் விசாரணைகளை மேற்கொண்டார்.

மாலை வரையில் போராட்டம் நடைபெற்ற நிலையில் நீதிபதி சிறைச்சாலைக்கு வராத நிலையிலும் சிறைச்சாலை அதிகாரிகள்,பொலிஸ் உயர் அதிகாரிகளின் வேண்டுகோளையேற்று சிறைச்சாலை அதிகாரிகள் விடுத்தவேண்டுகோளையடுத்து சிறைக்கைதிகள் கூரையில் இருந்து இறங்கிச்சென்றதையடுத்து போராட்டம் முடிவுக்குவந்தது.