நிந்தவூரில் பெண் உத்தியோகத்தர் மீதான தாக்குதலை கண்டித்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நிந்தவூர் கமநல சேவைகள் நிலையத்தின் உயர் அதிகாரியின் தாக்குதலுக்குள்ளான பெண்ணுக்கு நீதி கோரியும் குறித்த உயர் அதிகாரியின் செயற்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்தும் மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு,கல்லடி உப்போடையில் இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராடுவோம்,போராடுவோம் தவப்பிரியாவுக்கு நீதி கிடைக்கும் வரைக்கும் போராடுவோம்,முடக்காதே முடக்காதே பெண்களின் முன்னேற்றத்தினை முடக்காதே,பதவி நீக்கு பதவி நீக்கு பெண்ணை தாக்கிய ஆண் அதிகாரியை பதவி நீக்கு போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவியுமான திருமதி செல்வி மனோகர் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருமளவு பெண்கள் கலந்துகொண்டனர்.

ஊர்வலமாக சென்ற பெண்கள் கல்லடி உப்போடை இராமகிருஸ்ணமிசனுக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிந்தவூர் கமநல சேவைகள் நிலையத்தில் கடையாற்றும் பெண் உத்தியோகத்தரான தவப்பிரியா மீது தாக்குதல் நடாத்திய அதிகாரியின் பதவியை நீக்கி அவர் மீதான விசாரணையை முன்னெடுக்கப்படவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் குறித்த அதிகாரி செயற்பட்டுள்ளதாகவும் இதற்கு கடுமையான நடவடிக்கையினை முன்னெடுக்க ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இங்கு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.