மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுமி மரணம் -ஆத்திரத்தில் உறவினர்கள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் வாராந்த மருத்துவ சிகிச்சைக்காக வந்த சிறுமி ஓருவர் இன்று வைத்தியசாலையில் உயிரிழந்தமை தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று குறித்த சிறுமி உயிரிழந்த நிலையில் வைத்தியசாலைக்கு முன்பாக இன்று மாலை உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் ஒன்றுகூடியதனால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் வாராந்தம் மருந்தினை ஏற்றிக்கொள்வதற்காக ஆரையம்பதி,காங்கேயனோடையை சேர்ந்த பதுர் பள்ளி வீதியை சேர்ந்த 15வயதுடைய பாத்திமா ஜவ்ரா என்னும் சிறுமி வந்துள்ளார்.

இவருக்கு ஒவ்வொரு வாரமும் இரண்டு டோஸ் மருந்துகள் ஏற்றப்படும் நிலையில் அன்றைய தினம் 20டோஸ்கள் ஏற்றப்பட்டதாகவும் இதனால் குறித்த சிறுமி கவலைக்கிடமான நிலையில் சென்றதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த மருந்தினை சிறுமிக்கு ஏற்றும்போது குறித்த சிறுமி தமதுக்கு வழமைக்கு மாறாக ஏற்றப்படுவதாக தாதியர்களிடம் தெரிவித்தபோதிலும் அதனை அவர்கள் கருத்தில்கொள்ளவில்லையெனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிறுமியின் உயிரிழப்பு தமது கவலையீனமே காரணம் என வைத்தியசாலை நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளபோதிலும் இனியொரு மரணம் நிகழாத வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலும் உறவினர்களினால் முறையிடப்பட்டுள்ளது.