உரிமைகளை பாதுகாக்க செயற்பட்டால் கிழக்கு தமிழர்களை யாராலும் காப்பாற்றமுடியாது -இரா.துரைரெட்னம்

13வது திருத்த சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளதால் அமுலாக்கப்பட்டுள்ள விடயங்களையும் அமுலாக்கப்படாத விடயங்களையும் பேசுவதற்குரிய களத்தை தமிழ் தலைமைகள் உருவாக்க வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.சிரேஸ்ட உபதலைவருதான இரா.துரைரத்தினம் தெரிவித்துள்ளார்.


மீண்டும் மீண்டும் கிழக்கு மாகாணத்தில் நாங்கள் உரிமையா சலுகையா என்ற விடயத்தில் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நாங்கள் செயற்படுவோமானால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை யாராலும் பாதுகாத்துக்கொள்ள முடியாத சூழ்நிலையுருவாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

இன்று மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
தற்போது உள்ள அரசியல் நிலைமைகளை பொறுத்தவரையில் கடந்த காலத்தில் இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஊடாக 13 ஆவது திருத்தச் சட்டம் அமுல் ஆக்கப்பட்டு முழு நாட்டிலும் மாகாணசபை நிர்வாக முறை ஊடாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

பாராளுமன்றத்தில் சட்டவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த விடயம் தற்சமயம் எமது கையில் இருக்கின்றவிடயமாகும். அமுல்படுத்துவதற்கு எந்தவித தடையும் இருக்காது. குறிப்பிட்ட காலமாக ஜனாதிபதி அவர்கள் இந்தியாவுக்கு சென்று வரும்போது இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பில் உள்ள விடயங்களை கலந்துரையாடல் என்ற அளவிற்கு முன்னேற்றம் அடைந்து இருக்கின்றது.

அதேபோல வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழ் கட்சிகள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கூறியிருக்கின்றார்கள். தற்சமயம் எங்களைப் பொறுத்தவரையில் தமிழ் கட்சிகளை பொறுத்தவரையில் 13வது திருத்த சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளதால் அமுலாக்கப்பட்டுள்ள விடயங்களையும் அமுலாக்கப்படாத விடயங்களையும் பேசுவதற்குரிய களத்தை தமிழ் தலைமைகள் உருவாக்க வேண்டும்.

தமிழ் தலைமைகள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்திய அரசுடனும் இலங்கை அரசுடனும் பேசுவதற்கான ஒரு களத்தை உருவாக்கி,கையில் இருக்கின்ற அதிகாரத்தை முதல் கட்டமாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதன் ஊடாக எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்குரிய அதிகாரத்தை தமிழர்கள் தங்களுடைய கையில் வைக்கக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நீண்ட காலமாக உரிமையா சலுகையா என்ற விடயத்தில் தமிழர்கள் குறிப்பாக கிழக்கு மாகாண தமிழர்கள் உரிமை என்ற அடிப்படையில் மத்திய அரசாங்கத்தில் எந்தவிதமான அமைச்சுப் பதவிகளையோ எந்தவித பொறுப்புவாய்ந்த பதவிகளையோ எடுக்கவில்லை. அதற்குரிய காரணம் தமிழ் மக்கள் அல்ல. உரிமையா சலுகையா என்ற விடயத்தில் தமிழ் மக்கள் அதை கூடுதலாக எதிர்பார்த்திருந்தார்கள், மத்திய அரசாங்கத்தில் அமைச்சர் பொறுப்புக்களை எடுப்பதென்பது தமிழர்கள் விலை போய் விடுவார்கள் என்று ஒரு நிலைப்பாடு இருந்தது.

ஆனால் தற்சமயம் உள்ள சூழ்நிலையினை பொறுத்தவரையில் கிழக்கு மாகாணத்தில் ஏனைய இனங்களை சார்ந்த குறிப்பாக முஸ்லிம் அமைச்சர்களும் சிங்கள அமைச்சர்களும் இந்த அமைச்சர் பதவியை எடுத்துக்கொண்டு வடக்கு கிழக்கில் மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக தமிழ் பகுதிகளில் வேண்டா வெறுப்பாக நடந்து கொள்வதும் அந்த விடயத்தில் தமிழர்களாகிய நாங்கள் கிட்டத்தட்ட இருபத்தைந்து முப்பது வருட பாதிப்புகளை எதிர்நோக்கி உள்ளோம்.

கிழக்குமாகாண தமிழர்களைப் பொறுத்தவரையில் எதிர்காலத்தில் ஒரு அரசியல் அதிகாரத்துடன் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுகின்ற கட்சிகள்,பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படப்போகும் கட்சிகள் அமைச்சு பதவிகளை எடுத்துக்கொள்ள  கூடியவாறு கூடுதலான பாராளுமன்ற ஆசனத்தை பெறுவதற்கு அனைத்து கட்சிகளும் ஒரே கூடையில் சேர்ப்பதன் ஊடாக ஒரே குடையில் தேர்தலில் போட்டியிடுவதன் மூடாக ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதிகமாகப் பெற்றுக் கொள்ள முடியும்.அதன் ஊடாக மத்திய அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை எடுப்பதன் ஊடாகவே எதிர்காலத்தில் கிழக்கு தமிழர்களை நாங்கள் பாதுகாக்கமுடியும்.
மீண்டும் மீண்டும் கிழக்கு மாகாணத்தில் நாங்கள் உரிமையா சலுகையா என்ற விடயத்தில் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நாங்கள் செயற்படுவோமானால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை யாராலும் பாதுகாத்துக்கொள்ள முடியாத சூழ்நிலையுருவாகும் என தெரிவித்துள்ளார்.