கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் (நேரலை)

மட்டக்களப்பினை மீண்டும் மிரட்டும் வெள்ளம் -முப்படையும் களத்தில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளதுடன் சில பகுதிகளிலும் முப்படையினரும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் நீரில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளது.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம்,கித்துள்,வேப்பவட்டுவான் ஆகிய நீரில் மூழ்கிவருவதன் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்களை அங்கிருந்து ஆகாயமார்க்கமாகவும் மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.அப்பகுதியில் இருந்து 73பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று பகல் மாவடியோடையூடாக மீட்பு பணிக்காக உழவு இயந்திரத்தில் இயந்திரப்படகு கொண்டுசென்றபோது உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டபோது அதில் பயணித்த மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உத்தியோகத்தர் ஒருவர் உட்பட எட்டு பேர் படையினரால் மீட்கப்பட்டனர்.

வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ள பகுதிக்கு நேரடியாக சென்றுள்ள மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தார்.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பிரம்படித் தீவு , முறுக்கன் தீவு, சாராவெளி, அம்புஸ்குடா போன்ற கிராமங்களில் வெள்ள நீர் அதிகரித்து வருவதன் காரணமாக அங்கிருந்து பொதுமக்களை பாதுகாப்பாக படகு மூலம் வெளியேற்றும் பணிகளில் தற்போது படையினரும், அனர்த்த அபாயக் குறைப்புப் பிரிவினரும், பிரதேச இளைஞர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பகுதியில் தற்போது பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் நேரடியாக நின்று தேவையான உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிவருவதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மீட்கப்பட்ட இவர்கள் இயந்திரப்படகு மூலம் கொண்டுவரப்பட்டு கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் ஓர் நலன்புரி நிலையம் அமைக்கப்பட்டு அவர்களுக்கான அடிப்படை வசதிகளும் ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

வெள்ள நீர் அதிகரித்துவருவதன் காரணமாக மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியூடாக சித்தாண்டி ஊடாக நீர் பாய்வதன் காரணமாக போக்குவரத்து செய்தில் மக்கள் கஸ்டங்களை எதிர்நோக்கும் நிலையேற்பட்டுள்ளது.