மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம்.



இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் இந்த வருடத்திற்கான 4 வது கூட்டத் தொடரும் வருடத்தின் இறுதி அபிவிருத்திக் கூட்டமுமான அபிவிருத்திக் கூட்டம் மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான S. வியாழேந்திரன் தலமையில் இடம் பெற்றது.

இன்றைய கூட்டத்தில் முன்னா ள் ராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்,  பிரதேசமட்ட தவிசாளர்கள், திணைக்கள அதிகாரிகள் போன்ற அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.

இன்றைய கூட்டத்தின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் எதிர் நோக்கிய பிரச்சனை தொடர்பாகவும்,கடந்தகால அரசினால் புறக்கணிக்கப்பட்ட மக்களது அபிவிருத்தி தேவைகள் தொடர்பாகவும் பேசப்பட்டது.

விசேடமாக மாவட்டத்தின் வெள்ள நிலை தொடர்பாக ஆராயப்பட்டு சில தீர்மாணங்களும் நிறைவேற்றப்பட்டது. மேலும் டெங்கு நோய் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டு இது தொடர்பாக அற்பணிப்புடன் அனைவரும் செயற்பட வேண்டும் எனவும் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரால் திணைக்கள மற்றும் சுகாதாரத் துறைசார்ந்தவர்களையும் அதே நேரம் பிரதேச சபையினரிடமும் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது.

இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ சதாசிவம். வியாழேந்திரன் அவர்கள் விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். துரிதமாக அதனை மக்கள் சார்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாட்டில் மக்கள் மத்தியில் தற்கால அரசாங்கத்தை பற்றி போலித்தனமான கருத்துக்களை ஒரு சில அரசியல் வாதிகளால் மக்கள் மத்தியில் திணிக்கப்படுவதாகவும்அவ்வாறான அச்ச நிலமை தற்காலத்தில் இல்லை எனவும் மக்கள் சுதந்திரமாக நடமாடக் கூடிய அனைத்துத் தேவைகளும் கடந்த அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கத்தில் அதிகம் கானப்படுவதாகவும் மக்கள் இது தொடர்பாக அச்சப்படத் தேவையில்லை எனவும் கேட்டுக்கொண்டார்.

நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்ததில் அதிகம் விவசாயிகளும், மீனவர்களும் கூலித்தொழிலில் ஈடுபடுபவர்களும் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தொடர்பான வாழ்வாதார மற்றும் தொழில் சார்ந்த முன்னேற்ற நகர்வுகள் பெற்றுக்கொடுப்பதற்குரிய வேலைகள் வேகமாக இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மண் அகழ்வில் சட்டவிரோதமாக ஈடுபடுபவர்களுக்காக தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். சட்ட விரோத மண் அகழ்வினால் வயல் நிலங்கள் சேதமாக்கப் படுவதாகவும் குறிப்பிட்டார்.

வன இலாகா மற்றும் வளவளத்துறை சார்ந்து மக்கள் எதிர்நோக்கும் விவசாயக்காணி, வாழ்வாதாரக்காணி, மேய்ச்சல் தரை நிலம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அமைச்சரோடு தான்  கலந்துறையாடி தற்காலிகமாக திணைக்களத்தின் நடவடிக்கையினை தடுத்து வைத்திருப்பதாகவும் தொடர்ச்சியாக எமது மக்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்கப் போவதில்லை எனவும் மக்கள் சார்ந்த முடிவுகள் எதிர்காலத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஆரயம்பதி பிரதேச சபை எல்லைக்குள் காத்தான்குடி  நகரசபையினர் நிதி அறவீடு செய்வது தொடர்பாக தனக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அவ்வாறு அறவிடப்பட்டிருந்தால் அது நிறுத்தப்பட வேண்டும் எனவும் இது தொடர்பாக ஆராயப்பட்டு விசேட தீர்மானம் மேற்கொண்டு  சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தனக்கு விசேட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் எந்த ஒரு பிரதேச சபை எல்லையின் உள்ளே ஏனைய பிரதேச சபை அதிகாரம் செலுத்த முடியாது எனவும்  இது தொடர்பான எல்லைப் பிரிப்புகள் தெளிவாக தெரியப்படாதவிடத்து அதற்காக நில அளவைத் திணைக்களத்தின் உதவியினைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கேட்டுக்கொண்டார்.

படுவான்கரை நிலங்களை விட இம்முறை வெள்ளத்தினால் எழுவான் கரை நிலப்பகுதியே அதிகம் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டது இதற்கு சிறந்த வடிகால் அமைப்பு இன்மையே  காரணமாக அமைகின்றது சிறந்த வடிகாலமைப்பு எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.
பரீட்சை நாட்களில் விசேடமாக மாணவர்களுக்கு பாதுகாப்பு ஒழுங்கினை ஏற்படுத்திக் கொடுத்த அனைவருக்கும் விசேட நன்றியையும் தெரிவித்தார்.தொடர்ந்தும் மக்களுக்காகவே அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் திறம்படச் செயற்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

வெள்ள அனர்த்தத்தின் போது 14 பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 345 கிராமங்களும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களும் 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனிநபர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் கிட்டத்தட்ட ஒரு லட்சம் குடும்பம் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மை குறிப்பிடத்தக்கது