மட்டக்களப்பில் வெள்ளம் -10ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு –தொடரும் அவலம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பல வாரங்களாக பெய்த மழை இன்று ஓய்வுந்துள்ள நிலையில் பல இடங்களில் வெள்ள நிலைமைகளும் இடம்பெயர்வுகளும் தொடர்ந்து வருவதாக பிரசே செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேசசெயலகங்களை சேர்ந்த 10738 குடும்பங்களை சேர்ந்த  35756 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பகுதியில் பல பகுதிகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.மண்டூர்-வெல்லாவெளி பிரதான வீதி,ஆனைகட்டியவெளி பிரதான உட்பட பல வீதிகளின் போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேற்றுச்சேனை கிராமத்திற்கான போக்குவரத்துகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் இயந்திர படகுகள் மூலம் போக்குவரத்துகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

வெல்லாவெளி பிரதான நீர் வெளியேறும் பகுதிகளில் அடைந்துள்ள நீர்தாவரங்களை அகற்றும் பணிகளை போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் ஜோ.ரஜனி தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.இந்த பணிக்கு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமும் நேரில் சென்று உதவிகளை வழங்கினார்.

இதேவேளை ஏறாவூர்ப்பற்று,கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளின் பல பகுதிகள் வெள்ளத்தின் மூழ்கியுள்ளதுடன் தொடர்ந்தும் மக்கள் இடம்பெயர்ந்துவருகின்றர்.

இத்தொடர் மழையினால் ஒரு வீடு முழுமையாக சேதம் அடைந்துள்ளதாகவும் 42 வீடுகள் பகுதியளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள பாதிப்;பினால் முருத்தானை, பிரம்படித்தீவு ,சாராவெளி, முறுக்கந்தீவு ,அக்குறானை ,நாசியந்தீவு, புலாக்காடு , வடமுனை ,ஊத்துசேனை,கட்டு முறிவு,மதுரங்கேனி குளம், பெண்டுகள்சேனை போன்ற கிராமங்களின் போக்குவரத்துகள் முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

பிற மாவட்டங்களில் இருந்து வருகின்ற வெள்ள நீரினால் குளங்கள் பெருக்கெடுக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை கண்காணிக்கும் பணிகளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் நீர்பாசன திணைக்களம் கண்காணிக்கும் பணிகளை முன்னெடுத்துவருகின்றது.