பெண்கள் மட்டக்களப்பில் பேரணி – வன்முறைகளை தடுக்குமாறும் கோரிக்கை

நவம்பர் 30ஆம் திகதி தெற்காசிய பெண்கள் தினமாகும்.இதனை முன்னிட்டு பெண்களுக்கு எதிரான வன்முறையினை ஒழிக்கும் வகையிலான 16நாள் செயல்வாதம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு காந்திபூங்காவில் இருந்து மட்டக்களப்ப பேரூந்து நிலையம் வரையில் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது.
அனர்த்த முகாமைத்து பெண்கள் கூட்டமைப்பு,பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு என்பன இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளிப்படுத்தும் பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் பெண்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
வளங்களை அழித்து வன்முறைக்கு இடமளிப்பதை நிறுத்துவோம்,பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு துரித நீதிவேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை பேரணியில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
பேரணியானது மட்டக்களப்பு பிரதான பேரூந்து நிலையத்தினை வந்தடைந்ததும் அங்கு பெண்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை வெளிக்கொணரும் வகையிலான விழிப்புணர்வு நாடகம் நடாத்தப்பட்டது.