
2004ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதத்தில் தேசிய வாசிப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 'வாசிக்கும் சமூகத்தினை உருவாக்க சிறுவர்களிடமிருந்து ஆரம்பிப்போம்' எனும் தொனிப்பொருளில் 2019ம் ஆண்டுக்கான வாசிப்பு மாத நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெற்று வருகின்றன.
இதன்படி சிறுவர்களின் பொது அறிவின் மீதான ஆர்வத்தினை அதிகாரிக்கும் வகையில் மட்டக்களப்பு பொது நூலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட வினாடி வினாப் போட்டியில் மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட மெதடிஸ்த மத்திய கல்லூரி, புதூர் விக்னேஷ்வரா வித்தியாலயம், வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலை, மகாஜன கல்லூரி, கருவேப்பங்கேணி விபுலானந்தா கல்லூரி, பூநொச்சிமுனை இப்ராஹிம் வித்தியாலயம், கல்லடி விவேகனந்தா மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள் கலந்து கண்டிருந்தனர்.
மேற்படி ஏழு பாடசாலைகளின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்ற வினாடி வினாப் போட்டியின் நடுவர்களாக கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் க.சத்தியசேகர், மாவட்ட சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு உத்தியோகத்தர் குகதாசன் மற்றும் திருமதி சுந்தரமதி வேதநாயம் ஆகியோர் கலந்து கொண்டதுடன். சன சமுக உத்தியோகத்தர் அன்பழகன் குருஸ் போட்டிகளை நெறிப்படுத்தி நடாத்தியிருந்தார்.
இறுதிப்போட்டியில் மகாஜனக் கல்லூரியும், மெதடிஸ்த மத்திய கல்லூரியும் தெரிவாகி போட்டியிட்டிருந்தன. இறுதிவரை விறுவிறுப்பாக இடம்பெற்ற மேற்படி போட்டியில் முதலாம் இடத்தினை மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி வெற்றி கொண்டது.
அரையிறுதிவரை முன்னேறிய வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையானது மூன்றாம் இடத்தினை பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.