மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் "எதிர்பார்பின் இளைஞர் முகாம்” என்ற தொனிப்பொருளில் வதிவிட இளைஞர் முகாம் வவுணதீவில் கடந்த 01.11.2019 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்றது.
இவ் இளைஞர் முகாமில் பங்குபற்றிய இளைஞர்,யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கு நிகழ்வு நேற்று (03.11.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது, இதன் போது பங்குபற்றிய இளைஞர் யுவதிகளுக்காக சீ.மூ இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவரினால் ரீ சேட் வழங்கி வைக்கப்பட்டது.
பிரதேச இளைஞர் சேவை அதிகாரி கணேசமூர்த்தி சசீந்திரன் அவர்களின் ஒழுங்கமைப்பு மற்றும் வழிகாட்டலில் மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத் தலைவரும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் தொடர்பாடல் பிரிவு தலைவருமான ரி.விமலராஷ் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் அதிதிகளாக சீ.மூ இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் , முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தலைவர் மா.சசிக்குமார், வவுணதீவு சாலம்பைக்கேணி கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் சதீஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவ் இளைஞர் முகாமானது சவால்களை எதிர்கொள்வது , தலைமைத்துவபொறுப்பு, நேர்மறை சிந்தனை, அறிவாற்றல் மற்றும் இளைஞர் யுவதிகள் மத்தியில் கடும்போக்குவாதம் வியாபித்தலை தடுத்தல், சமூகவலைத்தளங்களை சமூகத்திற்கு நன்மை பயக்கும் வகையில் பயன்படுத்தல் தொடர்பான வழிகாட்டல்களை வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.