கல்வியை ஆயுதமாக பயன்படுத்தவேண்டும் -மட்டு.மாநகரசபை உறுப்பினர்

தமிழ் மக்கள் எதிர்காலத்தில் தமது முன்னேற்றத்திற்கான ஆயுதாக கல்வியை மாற்றவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வறிய நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சியை நோக்காக கொண்டு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வொன்று இன்று காலை நடைபெற்றது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருச்செந்தூர் மற்றும் கல்லடி பகுதியில் வறிய நிலையில் உள்ள மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

சுவிஸ் உதயம் அமைப்பினால் இந்த கற்றல் உபகரணங்கள் இன்று காலை திருச்செந்தூர் பல்நோக்கு கட்டிடத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டன.

சுவிஸில் இருந்து வருகைதந்த சுவிஸ் உதயம் அமைப்பின் செயலாளர் அம்பலவாணர் ராஜன்,மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திருமதி செல்வி மனோகர்,சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் விமலநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போ சுமார் 60மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

வறிய மாணவர்களின் கற்றல் நடவடிக்கை மற்றும் வறிய நிலையில் உள்ள பெண்களின் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றினை கருத்தில் கொண்டு சுவிஸ் உதயம் அமைப்பு உதவித்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டம் இன்று பல வழிகளிலும் பின்தங்கியுள்ளது.இந்த நிலையினை மாற்றவேண்டுமானால் அது கல்வியினால் மட்டுமே முடியும்.நாங்கள் கற்பதன் மூலமே எமது சமூகத்தினை முன்கொண்டுசெல்லமுடியும்.

எமது எதிர்கால சமூகம் தலைநிமர்ந்து வாழவேண்டுமானால் நாங்கள் கல்வியை ஆயுதமாக கொண்டு போராடவேண்டும்.கல்வியை நாங்கள் ஆயுதமாக மாற்றுவதன் ஊடாகவே எமது சமூகம் முன்னோக்கி செல்லமுடியும்.

அதன் காரணமாகவே சுவிஸ் உதயம் அமைப்பு கல்வியின் வளர்ச்சியை நோக்காக கொண்டு பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்துவருகின்றது.நாங்கள் வழங்கும் உதவிகளைப்பெற்று கல்வியை கற்றும் பணியை மட்டும் மாணவர்கள் செய்யவேண்டும் என்றார்.