இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு ' தேச சக்தி '' விருது வழங்கி கௌரவிப்பு.


(சசி துறையூர்) 
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கிழக்குமாகாண பிராந்திய அலுவலகத்தில் (மட்டக்களப்பு) இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் 
இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கீர்த்தி ஸ்ரீ திரு.நேசதுரை பிருந்தாபன் அவர்களுக்கும் தேச சக்தி விருது வழங்கல்.

இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையின் மத்திய மாகாண சமாதான நீதிவான்கள் மாநாடு கடந்த 02.11.2019ம் திகதி சனிக்கிழமை பி.ப 3.00 மணிக்கு ஹட்டன் டிக்கோயா அபுசாலி மண்டபத்தில் பேரவையின் தேசிய பணிப்பாளர் கலாநிதி. பஹாத். ஏ. மஜீத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் கடந்த 05 வருடங்களுக்கும் மேலாக சமூகத்தின் மத்தியில் சிறந்த சேவையாற்றிய சமாதான நீதிவான்களுக்கு அவர்களின் சேவையை பாராட்டி தேச சக்தி விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இதன் போது இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கீர்த்தி ஸ்ரீ திரு.நேசதுரை பிருந்தாபன் அவர்களுக்கும் தேச சக்தி விருது வழங்கப்பட்டது. 

இவர் கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தராக மேலதிக கடமையை ஆற்றிவருவதுடன் கோறளைப்பற்று பிரதேச இந்து அறநெறிப்பாடசாலைகள் ஒன்றியத்தின் தலைவராகவும், திருகோணமலை குச்சவெளி அருள்மிகு செம்பீஸ்வரர் ஆலயத்தின் உபதலைவராகவும், புணாணை கிழக்கு விநாயகர் ஆலயத்தின் ஆலோசகராகவும், கிழக்கிலங்கை இந்துசமய கலாசார மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாகசபை உறுப்பினராகவும், தமிழின பதிணெண் சித்தர் பீடம் இலங்கைக்கிளையின் தொடர்பாடல்துறை பொறுப்பாளராகவும், தமிழர் பாரம்பரிய வழிபாட்டு அமைப்பு மற்றும் ஆதித்தழிழர் பண்பாட்டு பேரவையின் நிர்வாகசபை உறுப்பினராகவும் இருந்து பல பணிகளை ஆற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.