கின்னஸ் சாதனை படைத்த மட்டக்களப்பு இளைஞன் -மட்டக்களப்பில் பெருமை சேர்த்த தமிழன்

உலகளாவிய  ரீதியில் சாதனை நிலைநாட்டுபவர்களுக்கு அங்கிகாரம் வழங்கும் கின்னஸ்  உலக சாதனையில் இடம்  பிடிப்பதற்காக பல துறைகளில் சாதனையாளர்கள் முயற்சி செய்து சாதனையினை நிலைநாட்டி உள்ளனர்.

அந்த வகையில் இன்று மட்டக்களப்பில் இளைஞர் ஒருவர் உலக சாதனையொன்றினை படைத்து மட்டக்களப்புக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மட்டக்களப்பு பொது நூலகத்தில் வைத்து இந்த சாதனையினை பாலமீன் பகுதியை சேர்ந்த இளங்கோவன் மதனன் என்பவரே இந்த சாதனையை இன்று படைத்துள்ளார்.

இளங்கோவன் மதனன் 118 மூலகங்களைக் கொண்ட ஆவர்த்தன அட்டவணையினை இரண்டு நிமிடம் 41 செக்கன்களில் வரிசைக் கிரமமாக அடுக்கி சாதனை படைத்துள்ளார்.

ஆரம்பத்தில் இச் சாதனையினை இரண்டு நிமிடம் 49 செக்கன்களில் செய்து இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் கின்னஸ்ஸில் இடம்பிடித்திருந்த நிலையில் தற்போது அதனை 8 செக்கன்களால் முறியடித்து மதனன் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப் போட்டிக்கு நடுவர்களாக மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி. சரவணபவன், மாநகர பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, மட்டக்களப்பு ஆயுர்வேத வைத்திய அலுவலர் திருமதி பிரதீபா பார்த்தீபன், உடற்கல்வி ஆசிரியர்களான டானியல் கஸ்ரோன், ஜி. கிருஸ்ணராஜாஜீ, பி.பத்மகுமார், சங்கீத ஆசிரியர் ரி.மதனகுமார், ஆகியோர் கடமையாற்றினர்.