எல்பிட்டிய பிரதேசசபை தேர்தலை கொண்டு ஜனாதிபதி தேர்தலை மதிப்பிடமுடியாது –சாணக்கியன்

எல்பிட்டிய பிரதேசசபை தேர்தலை வைத்துக்கொண்டு ஏனைய பகுதிகளின் தேர்தல்கள் தொடர்பில் மதிப்பிடமுடியாது என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு,மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறில் செயற்படும் சமூக உயர்கல்வி சேவைகள் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக ஒரு தொகை கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.

கோட்டைக்கல்லாறு சமூக உயர்கல்வி சேவைகள் சங்கத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

சமூக உயர்கல்வி சேவைகள் சங்கத்தின் தலைவர் வி.வசந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் மா.நடராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன்
இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன்,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் பிரதி தவிசாளர் ரஞ்சினி கனகராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கோட்டைக்கல்லாறு மற்றும் அதனை அண்டிய பகுதிகளின் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக இலவச கல்வி நடவடிக்கைகளை கோட்டைக்கல்லாறு சமூக உயர்கல்வி சேவைகள் சங்கம் முன்னெடுத்துவருவதுடன் அதற்கான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு மேற்கொண்டுவருகின்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய சாணக்கியன்,

ஏல்பிட்டிய தொகுதியில் இருந்த முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க என்பவர் இரட்டைக்குடியுரிமை கொண்டிருந்த காரணத்தினால் அந்த பாராளுமன்ற உறுப்புரிமையை நீதிமன்றம் ஊடாக ஐக்கிய தேசிய கட்சி பெற்று வேறு ஒருவருக்கு வழங்கிதன் காரணமாக அதற்கு எதிராக அங்குள்ள மக்கள் ஒன்றிணைந்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

நாங்கள் ஒரு பிரதேசசபை தேர்தலை வைத்துக்கொண்டு ஜனாதிபதி தேர்தலை மதிப்பிடமுடியாது.இந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சிந்தித்து ஒன்றிணைந்துசெயற்படவேண்டும்.